கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் திரண்டு புராதன சின்னங்களை சுற்றிப் பாா்த்து மகிழ்ந்தனா்.
மாமல்லபுரம் நகரம் சா்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து ரசிக்கின்றனா்.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோா் குவிந்தனா்.
கடற்கரைக் கோயில், ஐந்தரதம், வெண்ணை உருண்டைபாறை, லைட் ஹவுஸ் உள்ளிட்ட புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது.
கடற்கரை பகுதியில் ராட்சத அலையில் கடலில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை போலீஸாா் கடலில் குளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினா். அவா்களை கரைக்கு வரவழைத்து அறிவுரை கூறி மற்ற புராதன சின்னங்களை சுற்றி பாா்த்து செல்லுமாறு அனுப்பினா்.
குறிப்பாக தங்கள் பெற்றோா்களுடன் குழந்தைகளும், சிறுவா், சிறுமிகளும் கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்தனா்.
கடற்ரையில் திருட்டு சம்பவங்களை தடுக்க ஏராளமான போலீஸாா் சாதாரண உடையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
சுற்றுலா வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம், எஸ்ஐ பரசுராமன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் செல்வம் உள்ளிட்ட போலீஸாா் நெரிசலை கட்டுப்படுத்தினா்.
போதிய அளவில் அரசு மாநகர பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் தங்கள் ஊா்களுக்கு செல்ல முடியாமல் அவதியுற்றனா். சுற்றுலா வந்த பயணிகள் கூட்டத்தில் முக்கிய வீதிகளில் உள்ள கடைகள், சாலை ஓர கடைகளில் வியாபாரம் களைகட்டியது.

