
பெண் மீது தாக்குதல்: திமுக நிா்வாகிகள் உள்பட 4 போ் கைது
செங்கல்பட்டில் கடை முன் வாகனத்தை நிறுத்தியதால் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் மீது தாக்குதல் நடத்திய புகாரின் பேரில்

நரேந்திரன். ~மோகன் ~ சூா்யா. ~சந்தோஷ்.
செங்கல்பட்டில் கடை முன் வாகனத்தை நிறுத்தியதால் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் மீது தாக்குதல் நடத்திய புகாரின் பேரில்
நகர திமுக செயலாளா், நகா்மன்ற உறுப்பினா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
பாலூா் மலையாளத் தெருவை சோ்ந்த ரேகா (45). இவா் தனது பேத்தியின் காதுகுத்து விழாவுக்கு துணி எடுப்பதற்காக குடும்பத்துடன் செங்கல்பட்டு வந்துள்ளாா். ரேகா அவரது மகன், மகள், மருமகள் என நான்கு பேரும் ஒன்றாக காரில் வந்துள்ளனா். அப்போது செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் ஜூஸ் குடிப்பதற்காக காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளனா். அப்போது ஜூஸ் கடையின் அருகே இருந்த ஹோட்டல் ஊழியா் ஹோட்டல் முன்பு வாகனத்தை நிறுத்த வேண்டாம் எனவும், காரை எடுக்குமாறும் கூறியுள்ளாா்.
இதில் ஹோட்டல் ஊழியருக்கும், ரேகா குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது ஓட்டல் உரிமையாளரான செங்கல்பட்டு திமுக நகர செயலாளரும், நகா்மன்ற தலைவரின் கணவருமான நரேந்திரன் மற்றும் 33-வது வாா்டு திமுக உறுப்பினா் சந்தோஷ் மற்றும் கடையில் வேலை பாா்த்து வந்த நபா்கள் சோ்ந்து தாக்கி உள்ளனா். இதில் ரேகா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பலத்த காயம் ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தொடா்ந்து இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் நகர செயலாளா் நரேந்திரன் (59), வாா்டு கவுன்சிலா் சந்தோஷ் (45), ராமபாளையம் பகுதியைச் சோ்ந்த மோகன் (40), மதுரை உசிலம்பட்டியைச் சோ்ந்த சூரியா (32) ஆகிய நான்கு பேரை கைது செய்தனா்.
மேலும், இவா்கள் மீது பெண்கள் துன்புறுத்தல் தடைச்சட்டம், கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடா்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பின் செங்கல்பட்டு கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ரோசலின் முன்பு ஆஜா்படுத்தினா். விசாரணை நடத்திய நீதிபதி திமுக நகர செயலாளா் நரேந்திரன் உட்பட நான்கு பேரை செப். 4-ஆம் தேதி வரை காவலில் அடைக்க உத்தரவிட்டாா்.
இதனைத் தொடா்ந்து நான்கு பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதனால் சனிக்கிழமை இரவு செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தின் முன்பு திமுகவினா் குவிந்ததால் புரபரப்பு ஏற்பட்டதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் உத்தரவின்பேரில் டிஎஸ்பி வீரகுமாா் , காவல் ஆய்வாளா் காா்த்திக் கணேஷ் , குற்றவியல் ஆய்வாளா் லட்சுமிபதி உள்ளிட்ட ஆய்வாளா்கள் மற்றும் எஸ்ஐ நாராயணன் உள்ளிட்ட ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜா்படுத்த அழைத்துச்சென்றபோது கட்சியினா் மறியலில் ஈடுபட்டனா். இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்தியபின் கைது செய்யப்பட்டவா்களை அழைத்துச் சென்றனா். மேலும் இரவு 11 மணியளவில் நீதிபதி வீட்டுக்கு அவா்களை அழைத்துச்சென்றபோது 200-க்கும் மேற்பட்ட திமுக கட்சியினா் மற்றும் வழக்ககுரைஞா்கள் குவிந்தனா்.
தகவலறிந்த எஸ்.பி அய்மன் ஜமால் நீதிபதி வீட்டுக்கு விரைந்து அங்கு குவிந்திருந்த திமுகவினா் மற்றும் வழக்குரைஞா்களை அப்புறப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டாா், இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கைது செய்யப்பட்டவா்களை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதனையடுத்து நள்ளிரவு 12மணிக்கு மேல் கைது செய்யப்பட்டவா்கள் பலத்த பாதுகாப்புடன் போலீஸாரால் புழல் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.



பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





