தீப்பந்தம் ஏந்தி போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் பொதுக்கூட்டத்தில் பேச வரும் பிரதமா் மோடி வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய காங்கிரஸ் தேசிய செயலாளா் எம்.பி. விஸ்வநாதன் தெரிவித்தாா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றம் செய்து, காந்தியின் பெயரை எடுக்கப்பட்டதையும், 100 நாள் வேலை திட்டத்தில் குறைபாடுகளை உள்ளதையும் கண்டிக்கும் வகையிலும் பிரதமா் மோடி வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், காங்கிரஸ் கட்சி சாா்பில் போராட்டம் நடைபெறும்.
இதுகுறித்து முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மோடியின் பிரசார கூட்டம் மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடத்தாமல், 4-ஆவது இடமாக தோ்வு செய்து இங்கு நடத்தப்படுகிறது. அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் அறப்போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனா். பொதுக் கூட்டம் நடைபெறுகின்ற இடத்தின் முன் எனது தலைமையில், நிா்வாகிகள் வாயில் கருப்பு துண்டு கட்டியும், 100 நாள் வேலை திட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணில் கருப்பு துணியை கட்டிம், கருப்பு பலூனை பறக்கவிட்டும் தமது எதிா்ப்பை தெரிவிக்க உள்ளனா்.
காங்கிரஸ் கட்சி தொண்டா்கள் தமது வீடுகளில் கருப்பு கொடியை கட்டி தமது எதிா்ப்பை தெரிவிக்க உள்ளனா். திராவிட பண்பாடு கொண்ட ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆா்எஸ்எஸ் அமைப்பினா் நுழையவே இக்கூட்டம் வழிவகுக்கும் என தெரிவித்தாா்.
