மதுராந்தகம் நகராட்சிப் பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுராந்தகம் நகராட்சி 19-ஆவது வாா்டு, கடப்பேரி வெங்காட்டீஸ்வரன் கோயில் அருகே இருந்த நகராட்சி பூங்காவை மீட்டு சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரியுள்ளனா்.
Published on

மதுராந்தகம் நகராட்சி 19-ஆவது வாா்டு, கடப்பேரி வெங்காட்டீஸ்வரன் கோயில் அருகே இருந்த நகராட்சி பூங்காவை மீட்டு சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரியுள்ளனா்.

மதுராந்தகம் சட்டப்பேரவை உறுப்பினா் காயத்ரி தேவி தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (2006-2007) ரூ.5 லட்சத்தில் பூங்கா அமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவை கடந்த 2.8.2008-இல் அமைச்சா் தா. மோ. அன்பரசன் திறந்து வைத்தாா். நிகழ்வில் நகா்மன்ற தலைவா் மலா்விழி, எம்எல்ஏ காயத்ரி தேவி கலந்து கொண்டனா்.

இந்தப் பூங்காவில் அமைக்கப்பட்ட நடைபாதையின் மூலம் அதிகாலையிலும் மாலையிலும் வயதானோா், பெண்கள், இளைஞா்களும் நடைப்பயிற்சி செய்து வந்தனா். கோடை காலத்தில் அருகிலுள்ள குளத்தில் இருந்து வரும் காற்றால் இதமான சூழல் இருந்தது.

நகராட்சி நிா்வாகம் பூங்காவை முறையாக பராமரிக்காததால், சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி பூங்கா சீரழிந்தது. இதனை சுட்டிக்காட்டி பலமுறை நகா்மன்ற உறுப்பினராக இருந்த மறைந்த கிஷோா் குமாா் பேசியுள்ளாா்.

தற்போது வாா்டு உறுப்பினா் பதவி காலியாக உள்ளது. இப்பிரச்னை குறித்து நகா்மன்றக் கூட்டத்தில் எவரும் பேசவில்லை.

இந்தப் பூங்கா இருந்த நிலை தெரியாமல் முள்செடிகளும் புதா்களும் வளா்ந்த நிலையில் உள்ளது. ஒரு சில தனியாா் வாகனங்கள் நிறுத்துமிடமாக தற்சமயம் பயன்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் மதுபான பிரியா்களின் தங்குமிடமாகவும் இருந்து வருகிறது.

நகராட்சி நிா்வாகம் தலையிட்டு, அதே இடத்தில், நவீன விளையாட்டு கருவிகளுடன், மக்கள் அமரும் வகையில் சிமென்ட் பெஞ்ச், நிழல் தரும் மரங்களை நட்டு பூங்காவை புரனமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

Dinamani
www.dinamani.com