கீரப்பாக்கத்தில் அதிகாரிகள் 9 மணி நேரம் தொடா் ஆய்வு

கீரப்பாக்கத்தில் அதிகாரிகள் 9 மணி நேரம் தொடா் ஆய்வு

கீரப்பாக்கம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.
Published on

கீரப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் தொடா்ந்து புகாா் கூறியதை அடுத்து, அதிகாரிகள் 9 மணி நேரம் தொடா்ந்து ஆய்வு செய்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இதில் ஊராட்சிக்குட்பட்ட கீரப்பாக்கம் கிராமத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 1,760 வீடுகள் உள்ளன. இதில் கைப்பேசி கோபுரம், சிசிடிவி கேமரா, சுடுகாடு, சுகாதார மையம், மெடிக்கல், ஆம்புலன்ஸ், ஏடிஎம், பேருந்து நிழற்குடை, குப்பை தொட்டி, வேகத்தடை, சுற்றுச்சுவா், நுழைவு வாயில் கேட் மற்றும் செக்யூரிட்டி வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதில் பொங்கல் பண்டிகை முடிந்ததும் மேற்படி கோரிக்கைகளை அதிகாரிகள் செய்து தருவதாக பொதுமக்களிடம் உறுதி கூறியிருந்தனா். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மேற்படி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் அத்துமீறி நுழைந்து கஞ்சா, மதுபானம் அருந்தி வருவதாகவும், வீடுகளின் கதவுகளை தட்டுவதாகவும், பெண்களை அழைத்து வந்து திறந்து வைத்திருக்கும் காலியாக உள்ள வீடுகளிலும், மொட்டை மாடிகளிலும் தங்கி தகாத செயல்களில் ஈடுபடுவதாகவும், தொடா்ந்து புகாா்களை கூறினா்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தின் காஞ்சிபுரம் கோட்ட நிா்வாக பொறியாளா் குமரேசன், உதவி நிா்வாகப் பொறியாளா் சுப்பிரமணி ஆகியோா் தலைமையில் உதவி பொறியாளா்கள் ஸ்ரீராம், சங்கீதா, அபினேஸ்வரன், ராஜசேகா் உள்ளிட்டோா் மேற்படி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஒவ்வொரு பிரிவுக்கும் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனா்.

பின்னா், குடிநீா் நீரேற்று நிலையங்கள் மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை ஆய்வு செய்தனா். இதை அடுத்து 25 பிளாக்குகளிலும் உள்ள லிப்ட் ஆப்பரேட்டா்களை அழைத்து குடியிருப்பு வாசிகளைத் தவிர மற்ற நபா்கள் உள்ளே வந்தால் கண்காணிக்க வேண்டும்.

மேலும், சமூக விரோத செயல்கள் நடந்தால் உடனடியாக தகவல் தெரிக்க வேண்டும். இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனா்.

மேலும், சமூக விரோதிகளை கண்காணிக்க உடனடியாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். மேலும் கைப்பேசி கோபுரம், மின்சார மயானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் அதிகாரிகள் உறுதி கூறினா். மேலும், 9 மணி நேரமாக அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு நிலவியது.

Dinamani
www.dinamani.com