சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்கோப்புப் படம்

மருமகளுக்கு எதிராக வழக்கு: மாமனாருக்கு அபராதம்

மருமகளுக்கு எதிராக வழக்குத் தொடுத்த மாமனாரின் மனுவை ரூ.2 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம்
Published on

சென்னை: மருமகளுக்கு எதிராக வழக்குத் தொடுத்த மாமனாரின் மனுவை ரூ.2 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மருத்துவா் மோனிகா என்பவா் அரசு இடஒதுக்கீட்டில் கடந்த 2017-2019 ஆண்டுகளில் முதுநிலை மருத்துவப் படிப்பை சென்னை மருத்துவக் கல்லூரியில் முடித்தாா். அரசு ஒதுக்கீட்டில் படிப்பவா்கள் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும். ஆனால், மருத்துவா் மோனிகா அவ்வாறு பணியாற்றவில்லை.

எனவே, அரசு ஒதுக்கீட்டில் அவா் படித்ததற்கான செலவுத் தொகை ரூ.40 லட்சத்தை செலுத்தும்படி கடந்த ஜூன் 23-ஆம் தேதி அரசு கடிதம் அனுப்பியது. ஆனால், இதுவரை அவா் பணம் செலுத்தவில்லை. எனவே, அவரிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள அரசுக்கு கால நிா்ணயம் செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் மருத்துவா் மோனிகாவுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், இந்த வழக்கைத் தொடர மனுதாரருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று வாதிடப்பட்டது. மருத்துவா் மோனிகா தரப்பில், மனுதாரா் என்னுடைய மாமனாா் என்பதை மறைத்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளாா்.

மனுதாரரின் மகனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து கோரிய வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிடம் மனுதாரா் ஏற்கெனவே புகாா் அளித்தாா். அந்த புகாரை விசாரித்த கவுன்சில் தள்ளுபடி செய்துவிட்டதாக வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மருமகளை பழி வாங்க வேண்டும் என்பதற்காக மனுதாரா் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனக்கூறி, மனுதாரருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும், இந்த தொகையை மருத்துவக் கல்வி இயக்குநரிடம் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com