பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

பல கோடி ரூபாய் எங்கே? - ஏமாற்றியதா தாட்கோ? தவிப்பில் மாணவர்கள்

சென்னை, ஆக. 9:  தமிழக அரசின் சார்பில் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விமான பணிப் பெண்கள் பயிற்சிக்கான சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மாணவிகள் மன உ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:11 am

கே.பாலசுப்பிரமணியன்

சென்னை, ஆக. 9:  தமிழக அரசின் சார்பில் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விமான பணிப் பெண்கள் பயிற்சிக்கான சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை.

இதனால், தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பயிற்சி முழுவதும் முடியவில்லை என்றும், "தாட்கோ'வை நம்பி தாங்கள் வாழ்விழந்து நிற்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) செயல்பட்டு வருகிறது.

இந்த கழகத்தின் மூலம் ஆதிதிராவிட மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதில், விமான பணிப்பெண்கள் பயிற்சியும் ஒன்று.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. திட்டம் தொடங்கிய காலத்தில், 100 பெண்களுக்கு விமான பணிப்பெண் பயிற்சி எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக, 2007 - 08 நிதியாண்டில் ரூ. 1 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. தமிழகம் முழுவதிலும் இருந்து இதற்கு பலர் விண்ணப்பித்தனர்.

தனியார் நிறுவனத்தின் மூலம்...  இந்த பயிற்சியை அளிக்க, சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், இந்த நிறுவனத்தின் அலுவலகம் அமைந்துள்ள இடத்துக்குச் சென்று பயிற்சி பெற வேண்டும்.

பயிற்சியிலேயே பாகுபாடு...  ""தாட்கோ' மூலமாகச் சென்ற மாணவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் தினமும் 2 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் செலவழித்து வெளி மாணவர்களும் படிக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு சிறப்பான பயிற்சியும், எங்களுக்கு அவர்களை விடக் குறைவாகவும் பயிற்சி அளிக்கின்றனர்'' என்று பெயர் கூற விரும்பாத மாணவர் தெரிவித்தார்.

எங்கே போனது பணம்?  இந்தப் பாகுபாடுகள் ஒருபுறம் இருக்க, கடந்த 2008 - 09-ம் ஆண்டில் மாணவர்களுக்கும் விமானப் பணி தொடர்பாக பயிற்சி அளிப்பதாக "தாட்கோ' அறிவித்தது.

100 மாணவர்கள், 100 மாணவிகள் என மொத்தம் 200 பேருக்கு ரூ. 2 கோடி ஒதுக்கப்படுவதாக நிதி நிலை அறிக்கையின்போது வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு நிதியாண்டு தொடங்கும்போதும் மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிப்பது வழக்கம். இதேபோன்று, 2008 - 2009-ம் ஆண்டில் மார்ச் மாத இறுதியில் வகுப்புகள் தொடங்கின. அதில், சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி என பல்வேறு ஊர்களில் இருந்தும் மாணவர்கள் படித்துள்ளனர்.

2009-ம் ஆண்டு மார்ச் வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் தர வேண்டுமென்றால், "இன்-ஃபிளை', "இண்டஸ்ட்ரியல்' பயிற்சிகள் அவசியம்.

அதாவது, பணிப்பெண்கள் விமானத்துக்குள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் (இன்-ஃபிளை), விமான நிலையத்துக்குள் உள்ள உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் (இண்டஸ்ட்ரியல்) எப்படி நடக்க வேண்டும் என்பதில் பயிற்சி பெறுவது கட்டாயம். அதன்பிறகே, பயிற்சி நிறைவுக்கான சான்றிதழ் வழங்கப்படும்.

ஆனால், 2008 - 09-ம் ஆண்டில் பயிற்சி சேர்ந்த மாணவர்களுக்கு அத்தகைய பயிற்சிகள் ஏதும் அளிக்கப்படவில்லை. இதனால், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சான்றிதழ் பெற முடியாமல் எந்த பணிக்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை மாணவர்களின் பெற்றோர் அணுகியுள்ளனர். அவர்களிடம், ""கடந்த ஆண்டு பயிற்சிக்கான பணம் தரப்படவில்லை. அதனால், அவர்களுக்கு பயிற்சி அளிப்பதை நிறுத்தி விட்டோம்'' எனத் தெரிவித்துள்ளனர்.

திட்டத்தைத் தொடங்கிய "தாட்கோ' நிறுவனத்தையும் தொடர்பு கொண்டுள்ளனர். அதற்குப் பதிலளித்த அதிகாரிகள், ""தனியார் நிறுவனம் 8 மணி நேரம் பயிற்சி அளிப்பதற்குப் பதிலாக, 2 மணி நேரம் மட்டுமே பயிற்சி கொடுத்துள்ளது. இதனால், பணம் தரவில்லை'' எனக் கூறியுள்ளனர்.

""தாட்கோ இல்லாமல் தனியாகப் படிக்கும் மாணவர்களுக்கும் 2 மணி நேரம்தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு அதிகாரிகள் கூறும் காரணம் சரியாக இல்லை. "ஏர் இந்தியா' நிறுவனத்தில் நல்ல சம்பளத்துக்கு எனக்கு வேலை கிடைத்தும் சான்றிதழ் இல்லாமல் சேர முடியவில்லை'' என்று மாணவி ஒருவர் தெரிவித்தார்.

கொள்கை விளக்கக் குறிப்பில்...  இப்போது தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் ஆதிதிராவிடர் நலத் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில், "விமான பணிப் பெண் பயிற்சி அளிக்கப்படுகிறது' என்று ஒரு வார்த்தையில் முடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 2008 - 2009-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அதே துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், "200 பேருக்கு ரூ. 2 கோடி செலவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சீருடை, தங்குமிடம், சாப்பாட்டுச் செலவும் அந்த நிதியில் அடக்கம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்கை விளக்கக் குறிப்பில் ஏன் இந்த முரண்பாடு, "2009 - 2010-ம் ஆண்டில் எத்தனை மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது, எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது' என்று வெளிப்படையாகக் கூற வேண்டியது தானே என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.