13 ஆண்டுகளாக ஊதிய உயர்வு பெறாத தலைமை ஆசிரியர்கள்

சென்னை, ஜூலை 11:   கடந்த 13 ஆண்டுகளாக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.   மத்திய அரசுக்கு நிகரான ஊ
Updated on
1 min read

சென்னை, ஜூலை 11:   கடந்த 13 ஆண்டுகளாக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.

  மத்திய அரசுக்கு நிகரான ஊதியத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  மத்திய அரசுக்கு இணையான தமிழக அரசின் 5-வது ஊதியக் குழு 1.1.96-ல் அமல்படுத்தப்பட்டது. அரசாணைபடி புதிய ஊதிய விகிதம் அறிவிக்கப்பட்டது. இதில் ஊதிய உயர்வை உயர்த்தி தரும்படி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

  இதைத்தொடர்ந்து ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை போன்று தமிழக அரசு ஆசிரியர்களுக்கும் 1.1.96 முதல் வழங்கியும், 1.9.98 முதல் பணப்பயன் பெறும் வகையிலும் ஆணை வழங்கப்பட்டது.

  அந்த ஆணையின்படி இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் ஆகியோருக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மட்டும் உயர்த்தப்பட்ட ஊதிய விகிதம் வழங்கப்படவில்லை.

  இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.4,000-4,500-ம், பட்டதாரி ஆசிரியருக்கு 5,000-5,500-ம், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.5,900-6,500-ம் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 6,500-ம், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.8,000-ம் என்று இருந்த ஊதியம் மாற்றப்படவில்லை.

  1998-ல் அப்போதைய கல்வி அமைச்சர் அன்பழகன், சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், ""மத்திய அரசிற்கு இணையான ஊதியத்தை (உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.8,000-275-13500 மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.10,000-325-15200) தற்போது வழங்குவதில் நிர்வாகச் சிக்கல் இருக்கிறது. அடுத்துவரும் ஊதியக் குழுவில் இது சரிசெய்யப்படும். அதுவரை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.500-ம், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.600-ம் தனி ஊதியமாக வழங்கப்படும்'' என்று அறிவித்தார்.

  அதேபோல, ""31.12.2005-க்கு முன்னர் பதவி உயர்வு பெற்ற உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே தனி ஊதியம் வழங்கப்படும் என்றும், 1.1.2006-க்குப் பிறகு பதவி உயர்வு பெறும் தலைமை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் இல்லை என்றும் அரசு அறிவித்தது. இதனால் 2006-க்குப் பிறகு பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், தற்போது பெற்றுவரும் ஊதியத்தில் இழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது'' என்று உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

  "1998-ல் அறிவிக்கப்பட்ட தனி ஊதியத்திற்குப் பதிலாக, தமிழக அரசின் 6-வது ஊதியக்குழுவில் வழங்கியிருக்க வேண்டிய ஊதிய விகிதத்தை உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி ஜூலை 13-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என்று தலைமை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com