கருணை அடிப்படையில் அமைச்சுப் பணியில் சேர காத்திருக்கும் 1,600 போலீஸ் வாரிசுதாரர்கள்!

சென்னை, ஜூலை 18: தமிழக காவல்துறையில் அமைச்சுப் பணியில் சேருவதற்காக 1,600 போலீஸ் வாரிசுதாரர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.   இவர்களை காவல்துறையில் காலியாக உள்ள அமைச்சுப் பணியாளர்கள்
Updated on
2 min read

சென்னை, ஜூலை 18: தமிழக காவல்துறையில் அமைச்சுப் பணியில் சேருவதற்காக 1,600 போலீஸ் வாரிசுதாரர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

  இவர்களை காவல்துறையில் காலியாக உள்ள அமைச்சுப் பணியாளர்கள் இடங்களில் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

  தமிழக காவல்துறையில் நிர்வாகம், சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளில் அமைச்சுப் பணியாளர்கள் சுமார் 4,500 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

  இவர்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 55 சதவீதம் பேரும், கருணை அடிப்படையில் (காவல்துறையினரின் வாரிசுதாரர்கள்) 25 சதவீதம் பேரும், அலுவலக உதவியாளர்கள் பதவி உயர்வு மூலம் 20 சதவீதம் பேரும் நிரப்பப்பட்டு வருகின்றனர்.

  ""காவல்துறையின் அமைச்சுப் பணியில் சேருவதற்காக காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் சுமார் 1,600 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே, மாவட்ட அளவில் 300 இளநிலை உதவியாளர்கள் காலிப் பணியிடங்கள் உள்ளன. காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவல்துறையினரின் வாரிசுதாரர்களை வைத்து உடனே காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார் தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் தலைவர் க.தெய்வேந்திரன்.

  இத்துடன் அமைச்சுப் பணியாளர் சங்கம் சார்பில் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை விவரம்:

  "2003-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மண்டல (ஐ.ஜி.) அலுவலகங்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக உரிய அமைச்சுப் பணியாளர்களுக்குப் பதவிகள் வழங்கப்படாமல், மிகக் குறைந்த இரவல் பணியாளர்களைக் கொண்டு சிரமங்களுக்கு இடையே செயல்படுகின்றன. எனவே, இந்த மண்டல அலுவலகங்களில் பணிபுரிய 3 கண்காணிப்பாளர், 6 உதவியாளர்கள் என தலா 24 பேர் என 4 மண்டலங்களுக்கு மொத்தம் 84 பேரை நியமிக்க வேண்டும்.

  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இந்த மனுக்களைக் கவனிக்க ஒவ்வொரு மாவட்டக் காவல், நகரக் காவல் அலுவலகத்திற்கும் ஒரு உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளை வழங்க வேண்டும். இப்பணிக்காக அமைச்சுப் பணிப் பதவிகள் ஏதும் இதுவரை வழங்கப்படவில்லை.

  காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) அலுவலகத்தில் மட்டும் ஒரு முதன்மை நிர்வாக அதிகாரி பதவி உள்ளது. டிஜிபி நிலையில் உள்ள அதிகாரிகள் தலைமையில் இயங்கும் மற்ற மூன்று அலுவலகங்களான சீருடைப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கழகம், போலீஸ் அகாதெமி மற்றும் சென்னை நகரம், சென்னை புறநகர் காவல் ஆணையரகங்களில் தலா ஒரு முதன்மை நிர்வாக அதிகாரி வீதம் ஐந்து பேரை நியமிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  ""காவல்துறையில் காலியாக உள்ள அமைச்சுப் பணியிடங்களை, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் தேர்ந்தெடுக்காமல், ஒரே நேரத்தில் நிரப்ப வேண்டும். அல்லது காவல் நிலையங்களில் பணிபுரியும் கணினி ஆபரேட்டர்கள் மூலம் நிரப்பலாம். இதுதொடர்பாக முதல்வருக்கு ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருக்கிறோம்'' என்றார் தெய்வேந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com