சென்னை, நவ.12: சமீபத்திய மழை காரணமாக சேதமடைந்த சாலைகளை, தார் கலவை கொண்டு சீரமைக்கும் பணிகளை வியாழக்கிழமை (நவ. 12) முதல் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக சீரமைப்புப் பணியை முழு வேகத்துடன் மேற்கொள்ள இயலவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நான்கு தினங்களாக பெய்த தொடர் மழையில் சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. தாற்காலிக நிவாரணமாக செங்கல் தூள்களைக் கொண்டு நிரப்பிய மாநகராட்சி, இப்போது தார்க் கலவை கொண்டு சீரமைத்து வருகிறது.
ஆனால், அண்ணாநகர் பிரதான சாலை (என்.எஸ்.கே. நகர்), பூந்தமல்லி நெடுஞ்சாலை (அமைந்தகரை சிக்னல்), நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, வடக்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட பல இடங்களில் கடந்த சில தினங்களாக எவ்விதச் சீரமைப்பும் மேற்கொள்ளப்படவில்லை. ஆள் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என்கின்றனர் அதிகாரிகள்.
கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய 65-வது பகுதி அலுவலகம், 465 தெருக்களைப் பராமரித்து வருகிறது. ஆனால் இந்த அலுவலகத்தில் 12 சாலைப் பணியாளர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய 129-வது பகுதி அலுவலகம், 256 தெருக்களைப் பராமரித்து வருகிறது. இங்கு 8 சாலை பராமரிப்பு பணியாளர்களே உள்ளனர்.
381 தெருக்களைப் பராமரித்து வரும் 153-வது பகுதி அலுவலகத்தில் 7 சாலை பராமரிப்பு பணியாளர்கள், 247 தெருக்களைப் பராமரித்து வரும் 128-வது பகுதி அலுவலகத்தில் 3 சாலை பணியாளர்கள், 111 தெருக்களைப் பராமரித்து வரும் 121-வது பகுதி அலுவலகத்தில் 9 பணியாளர்கள், 150 தெருக்களை பராமரித்து வரும் 36-வது பகுதி அலுவலகத்தில் 7 பணியாளர்கள் என அனைத்துப் பகுதி அலுவலகங்களிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு பகுதி அலுவலகத்திலும், அதிகபட்சமாக 15 சாலை பராமரிப்புப் பணியாளர்களை நியமித்தால்தான் சாலை பராமரிப்பு மற்றும் சீரமைப்பை முழு அளவில் மேற்கொள்ள முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
முடங்கும் நிலையில் மத்திய தார் கலவை மையம்: எழும்பூரில் அமைந்துள்ள இந்த மையம், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் சாலை சீரமைப்புப் பணிகளுக்காக தார் கலவையைத் தயாரித்து வழங்கும் முக்கியப் பணியை மேற்கொண்டு வருகிறது.
காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால், இந்த மையம் இப்போது முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ""150-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்த மத்திய வெப்ப தார் கலவை மையத்தில் தற்போது 90 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். தலைமைப் பொறியாளர் (2), லோடர் இயக்குபவர் (2), எலக்ட்ரீஷியன் (1), உதவி பொறி ஓட்டுனர் (2), ஓட்டுநர் (5), சாலை உருளை (ரோலர்) ஓட்டுநர் (18), மோட்டார் மெக்கானிக் (1), ஃபிட்டர் (2), கருமார் (1), தச்சர் (1), டர்னர் (1), ஆமர் மேன் (1), கிளீனர் (4), தொழிலாளி (38) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
ஊழியர் பற்றாக்குறை காரணமாக, குறித்த நேரத்துக்கு பகுதி அலுவலகங்களுக்கு தார் கலவையை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் சாலை போடும்போது, தார் கலவை 115 டிகிரி வெப்பத்தில் இருக்கும்போதே அதன் மீது சாலை உருளையை ஓட்ட வேண்டும். ஆனால் ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் இந்தப் பணி தடைபடுகிறது.
புதிதாக போடப்படும் சாலைகள் விரைவில் சேதமடைவதற்கு, இதுவும் முக்கியக் காரணம். எனவே, காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வேயில் ஆள்குறைப்பு நடவடிக்கை கூடாது: இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

பாக்கெட் நாவல் அனுபவம் பகிர்ந்த மாளவிகா மோகனன்!

கடல்காற்று வீசுவதால் கவலையில்லை... பந்துவீச்சு குறித்து ஷுப்மன் கில்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


