
சென்னை, அக். 15: தமிழிசைத் தேவாரப் பேரறிஞரும், சைவ சித்தாந்த உலகின் இசைஞானி என்று போற்றப்படும் கலைமாமணி தருமபுரம் ப.சுவாமிநாதன் (86) வியாழக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் காலமானார்.
சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள குன்றத்தூர் தச்சர் தெருவில் வசித்து வந்த அவருக்கு 3 மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு மனைவி சுலோச்சனா அம்மாள் உள்ளார்.
வாழ்க்கை குறிப்பு: நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம், வீராக்கண் கிராமத்தில் 29-5-1923-ம் ஆண்டு, மு.பஞ்சநாத முதலியார் -பார்வதி அண்ணி அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த ராஜகோபால் என்ற ப.சுவாமிநாதன், தனது 12-வது வயதில் தருமபுர ஆதீன மடத்தில் சேர்ந்தார்.
அங்கு 24-வது மகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் தொண்டராகப் பணிபுரிந்துகொண்டே, தேவார பாடசாலையில் சேர்ந்து தேவாரம் பாடும் பயிற்சியை மேற்கொண்டார்.
ஆறு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, தேவார இசைமணி பட்டம் பெற்றார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலை இசைக் கல்லூரியில் 4 ஆண்டுகள் பயின்று, முதல் மாணவராகத் தேறிய அவர், சங்கீத பூஷணம் பட்டம் பெற்றார்.
1968-ல் தருமபுர ஆதீன தேவாரப் பாடசாலை ஆசிரியப் பணியில் இருந்து வெளியேறிய அவர், தமிழகமெங்கும் தேவாரப் பாடல்களைப் பாடும் திருமுறைப் பணிகளில் ஈடுபட்டார்.
இவர் முன்னாள் ஆளுநர் கே.கே.ஷாவிடம் கலைமாமணி விருதையும், ஜி.கே.மூப்பனாரிடம் தமிழிசைச் சங்கம் சார்பில் இசைப்பேரறிஞர் விருதையும் பெற்றுள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சார்பில் தமிழக அரசவைக் கலைஞராகத் தேர்வு செய்யப்பட்டு, அப்போது நிதி அமைச்சராக இருந்த இரா.நெடுஞ்செழியனால் சிறப்பிக்கப்பட்டார்.
குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் கோயிலில் மும்முறை குடமுழுக்கு நடத்திய பெருமையும் இவரையே சாரும்.
100க்கும் மேற்பட்ட கேசட்டுகளில் இவர் பாடிய 11 திருமுறைகளும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் கட்டி இருக்கும் கோவில்களிலும், தமிழர்களின் இல்லங்களிலும் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
வியாழக்கிழமை மாலை நடைபெற்ற தருமபுரம் ப.சுவாமிநாதனின் இறுதி ஊர்வலத்தில் முன்னாள் நீதி அரசர் பி.ஆர்.கோகுலகிருஷ்ணனும், ஏராளமான சிவனடியார்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







