முன்னறிவிப்பின்றி மின் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை, ஜூலை 13: முன்னறிவிப்பு இல்லாமல் புறநகர் மின் ரயில் சேவையில் திடீர் மாற்றம் செய்யப்படுவதால், பயணிகள் தினமும் அவதிப்படும் அவலநிலை தொடர்கிறது. சென்னையில் கடற்கரை - எழும்பூர் - தாம்பரம் - செங்கல்ப


சென்னை, ஜூலை 13: முன்னறிவிப்பு இல்லாமல் புறநகர் மின் ரயில் சேவையில் திடீர் மாற்றம் செய்யப்படுவதால், பயணிகள் தினமும் அவதிப்படும் அவலநிலை தொடர்கிறது.
சென்னையில் கடற்கரை - எழும்பூர் - தாம்பரம் - செங்கல்பட்டு, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் - அரக்கோணம் மற்றும் கடற்கரை - மயிலாப்பூர் - வேளச்சேரி மார்க்கத்தில் தினமும் 608 புறநகர் மற்றும் மேம்பால ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களில் தினமும் சராசரியாக 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் புறநகர் மின் ரயில் சேவைகளை பெரிதும் நம்பியுள்ளனர். ஏராளமான பயணிகள் சீசன் டிக்கெட் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், புறநகர் மின் ரயில் சேவையில் முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் திடீரென மாற்றங்கள் செய்யப்படுவது அடிக்கடி நிகழ்கிறது.
தினமும் மாலையில் 5 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து தாம்பரம், எழும்பூர், வழியாக கடற்கரைக்கு (பீச்) இயக்கப்படும் விரைவு மின் ரயில் (ஃபாஸ்ட்) முன்னறிவிப்பு இல்லாமல் இப்போது சாதாரண ரயிலாக இயக்கப்படுகிறது.
இதுபோல விரைவு மின் ரயில்களை சாதாரண மின் ரயில்களாக மாற்றுவதால், அந்த ரயில்களின் பயண நேரம் அதிகரிக்கிறது.
இதனால், அரக்கோணம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வண்டலூர்- சிங்கப்பெருமாள் கோவில்- செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் பயணிகள் தங்களின் நீண்ட நேர பயணத்துக்கு உதவும், இணைப்பு ரயில்களை (லிங்க்) பிடித்து, பயணத்தைத் தொடர முடியவில்லை.
தினமும் இயல்பாக தொடரும் புறநகர் மின் ரயில் சேவையில், இதுபோன்ற மாற்றங்களை நடைமுறைப்படுத்தும் முன்பு பயணிகளிடம் கருத்து கேட்பதில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தினமும் 8 மின் ரயில் சேவை ரத்து?
புறநகர் மின் ரயில்கள் மற்றும் பெட்டிகளைப் பராமரிக்கும் தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் டி பிரிவு ஊழியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.
ரயில்வே வாரியத்தின் உத்தரவின்படி, ஒரு மின் ரயிலைப் பராமரிக்க குறைந்தபட்சம் 7 பணியாளர்கள் இருக்க வேண்டும்.
ஆனால், இப்போது தாம்பரம், ஆவடி ஆகிய பணிமனைகளில் ஒரு மின் ரயிலுக்கு 3 பணியாளர்கள்தான் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், பராமரிப்பு பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால், மின் ரயில்கள் அடிக்கடி பழுதடைகின்றன.
இதன் காரணமாக இரு மார்க்கங்களிலும் (அப் அண்ட் டவுன்) தினமும் 8 முதல் 10 மின் ரயில் சேவைகள் ஓசையின்றி ரத்து செய்யப்படுகின்றன.
இதை அறியாத பயணிகள், அடுத்து வரும் மின் ரயிலில் படையெடுப்பதால், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.
ஏராளமானோர் படிக்கட்டு பயணத்தை மேற்கொள்வதால், இதர பயணிகள் உள்ளே செல்லவும், கீழே இறங்கவும் இயலாமல் அவதிப்படுகின்றனர்.
டிக்கெட் கவுன்ட்டர்களில் நெரிசல்:
சென்னை கடற்கரை, பூங்கா, குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட சில பிரதான மின் ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுன்ட்டர்களில் போதிய பணியாளர்கள் இல்லாததால் நீண்ட வரிசையில் பயணிகள் தினமும் காத்திருக்கின்றனர். இந்த குறைகளைக் களைய தெற்கு ரயில்வே உடனடி நடவடிக்கை எடுக்கும் என ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
அனைத்து ரயில்களிலும் 12 பெட்டிகள் இணைக்கப்படுமா?
புறநகர் மின் ரயில்களில் 9 அல்லது 12 பெட்டிகள் (கார்) இணைத்து இயக்கப்படுகின்றன. பொதுவாக 9 பெட்டிகள் கொண்ட மின் ரயில்களை விட 12 பெட்டிகளில் கூடுதலாக ஆண்டுக்கு 45 லட்சம் பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.
ஆனால், ரயில் பெட்டிகளின் பற்றாக்குறை காரணமாக, முக்கிய நேரங்களில் மட்டும் 12 பெட்டிகளுடன் மின் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், முக்கிய நேரங்களில் குறிப்பிட்ட சில மின் ரயில்களில் 12 பெட்டிகளுக்குப் பதிலாக திடீரென 9 பெட்டிகளை இணைத்து இயக்குவதால், செயற்கையான நெரிசல் ஏற்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...