சென்னைப் புத்தகக் காட்சிக்கு சனிக்கிழமை வந்த குட்டி வாசகிகளில் ஒருவர் பூர்ணிமா. தன் போக்குக்கு இவர் புத்தகங்களை வாங்கிக் குவிக்க, இவருடைய வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் புத்தக மூட்டையைச் சுமந்தவாறே பின்னால் ஓடிக்கொண்டிருந்தார் இவருடைய தந்தை. பூர்ணிமா என்ன வாங்கினார்; அவருடைய பின்னணி என்ன என்று தெரிந்துகொள்ளும் வழக்கமான ஆர்வத்துடன் அவரை அணுகினோம். அவர் பேசிய பேச்சு இருக்கிறதே... அப்பப்பா? பாவம் அவருடைய அப்பா. பூர்ணிமாவுடனான உரையாடல் அப்படியே இங்கே:
பாப்பா நீங்க என்ன பண்றீங்க? எங்கிருந்து வந்திருக்கீங்க?
நான் பூர்ணிமா, மூன்றாம் வகுப்பு படிக்கிறேன். ஆமாம், நீங்க எதுக்கு இதெல்லாம் கேட்கீறீங்க?
(நாம் நம்மை அறிமுகப்படுத்திக்கொள்கிறோம்.)
ஓ பத்திரிகையா? சரி, சரி. நான் சாலிகிராமம். புத்தகம்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால், இங்கே வந்தேன்.
புத்தக ஆர்வம் எப்படி வந்தது?
எங்க வீட்டில நிறைய புத்தகங்கள் இருக்கு. வீட்டில இருக்கிறவங்க எப்பவும் படிச்சுகிட்டே இருப்பாங்க. சரி, நானும் படிக்கிறேன், புத்தகம் வாங்கிக்கொடுங்கன்னு கேட்டேன். நிறைய வாங்கிக்கொடுத்தாங்க. இப்ப என் வேகத்துக்கு அவங்களாலகூட படிக்க முடியல.
அப்ப நீங்க டி.வி. பார்க்க மாட்டீங்களா?
யார் சொன்னது? டி.வி. நிறைய பார்ப்பேன்... (நாக்கைக் கடித்துக்கொண்டு) ஓ... நீங்க புத்தகம் சம்பந்தமாதானே பேட்டி எடுக்கிறீங்க? டி.வி. பார்க்க மாட்டேன்னு போட்டுக்குங்க. நிறைய படிப்பேன்...
பொய் சொல்லாம சொல்லணும், யார் புத்தகம் உங்களுக்குப் பிடிக்கும்?
சுப்பாண்டி (கதாபாத்திரம்) புத்தகம்தான் பிடிக்கும். தினம் ரெண்டு கதைப் புத்தகமாவது படிப்பேன்.
சரி, இங்க என்னென்ன புத்தகமெல்லாம் வாங்கினீங்க?
நிறைய வாங்கியிருக்கேன். புத்தகப்பூங்கொத்து, தந்திரி தி மந்திரி, ஃபேரி டேல்ஸ், கிட்ஸ் பூங்கா, அப்புறம் என் தோழி யாழினிக்கு கொடுக்க ராமாயணா கேம்ஸ்...
சரி, புத்தகங்களோடு உட்காருங்க. ஒரு படம் எடுக்கணும்.
பத்திரிகையில போடுவீங்களா? இருங்க, இருங்க நான் என் கண்ணுக்கு மை விட்டுக்கணும்...(கைப்பையில் இருந்த மைக்கூட்டை எடுத்து கண்ணுக்கு விட்டுக்கொண்டு படத்துக்கு போஸ் தருகிறார்).
உடனிருக்கும் அவருடைய அப்பாவைப் பார்க்கிறோம். அப்பாவியாக நின்றுகொண்டிருந்தார்.