

சென்னை, ஜன.8: சென்னை சாந்தோம் டுமிங் குப்பத்தில் ரூ. 46 லட்சம் செலவில் சமூக நலக்கூடம் கட்டப்படும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மக்களை தேடி மாநகராட்சி நிகழ்ச்சி, சென்னை சாந்தோம் டுமிங் குப்பத்தில் மேயர் மா. சுப்பிரமணியன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேயர் பேசியது: மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.வி. சேகர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 46 லட்சம் மதிப்பீட்டில் சமூக நலக்கூடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
டுமிங் குப்பத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. இந்த வீடுகள் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பழைய குடியிருப்புகளை இடித்து புதியதாகக் கட்ட குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், வதந்திகளை நம்பி பொதுமக்கள் குடியிருப்புகளை காலி செய்துதர மறுத்துவிட்டார்கள்.
வீடுகளை காலி செய்து தந்தால் குடிசை மாற்று வாரியம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, வீடுகளை கட்டி குடியிருந்தவர்களுக்கே வீடுகள் ஒதுக்கித் தரப்படும். அதுவரை மாநகராட்சி இடங்களில் தாற்காலிகமாக தங்கிக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
ஏற்கெனவே நடைபெற்ற 12 மக்களைத் தேடி மாநகராட்சி நிகழ்ச்சிகளில் 9,552 மனுக்கள் பெறப்பட்டு, 6,824 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது என்றார் மா.சுப்பிரமணியன்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 400 மனுக்கள் பெறப்பட்டன. இதில் ரேஷன் கார்டு கோரி 300 பேரும், சுனாமி குடியிருப்பு தொடர்பாக 100 பேரும் மனுக்களை கொடுத்தனர். இதில் மாநகராட்சி தொடர்பான 40 மனுக்கள் பெறப்பட்டு, 30 மனுக்கள் மீது உடனடி
நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் தா. கார்த்திகேயன், துணை மேயர் ஆர். சத்தியபாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.