/

தீபாவளி சிறப்பு பஸ்களால் ஆம்னி பஸ்களுக்கு பாதிப்பு

தீபாவளியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை தமிழக அரசு இயக்கியதால், இம்முறை ஆம்னி பஸ்கள் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Updated On :16 நவம்பர் 2012, 10:03 pm

தீபாவளியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை தமிழக அரசு இயக்கியதால், இம்முறை ஆம்னி பஸ்கள் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பயணிகளின் வருகையை எதிர்பார்த்து கடைசி நேரத்தில் இயக்கப்பட்ட ஆம்னி பஸ்கள் அனைத்திலும் 30 சதவீத இருக்கைகள் காலியாக இருந்துள்ளன.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் சிறப்பு பஸ்களை தமிழக அரசு இயக்கி வருகிறது.

இந்த பண்டிகை கால நெரிசலைப் பயன்படுத்தி, தனியார் ஆம்னி பஸ்கள் வசூல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தன. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியபோதும், அவற்றின் வசூல் வேட்டை தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக நவம்பர் 9-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 6,859 சிறப்பு பஸ்களை தமிழக அரசு இயக்கியது. சென்னையிலிருந்து மட்டும் 2828 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும், கடைசி நேர பயணிகள் வருகையை கருத்தில் கொண்டு, தேவை அதிகம் இருந்த பகுதிகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில், கூடுதல் பஸ்களும் இயக்கப்பட்டன.

எப்போதும் இல்லாத அளவுக்கு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இம்முறை அதிக எண்ணிக்கையில் சிறப்பு பஸ்களை இயக்கியதால், ஆம்னி பஸ்களின் வசூல் பெருமளவு குறைந்துள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

3 லட்சம் பயணிகள்: தீபாவளி பண்டிக்காக அதிக அரசு பஸ்கள் இயக்கப்பட்டதன் காரணமாக, கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் பயணிகள் வருகை இருந்தது. நவம்பர் 9, 10, 11 ஆகிய மூன்று நாள்களில் மட்டும் 3 லட்சம் பயணிகள் சென்னையிலிருந்து அரசு பஸ்களில் பயணித்துள்ளனர்.

இவ்வாறு அரசு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டதன் காரணமாக, ஆம்னி பஸ்களால் இம்முறை முழுமையான கட்டணக் கொள்ளையில் ஈடுபட முடியவில்லை என்பது பயணிகளிடம் இருந்த வந்த புகார்கள் மூலமே தெரிந்தது.

ஏனெனில், எப்போதும் ஆம்னி பஸ்கள் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழும். ஆனால், இம்முறை வழக்கமான கட்டணத்தைக் காட்டிலும் ரூ. 200 முதல் அதிகபட்சம் ரூ. 400 வரை மட்டுமே கூடுதலாக வசூலித்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கடைசி நேரத்தில் வந்த பயணிகளிடம் பெரும்பாலான ஆம்னி பஸ்கள், வழக்கமான கட்டணத்தையே வசூலித்திருப்பதும் தெரியவந்தது.

உதாரணமாக, சென்னை - தூத்துக்குடி வால்வோ ஏ.சி. பஸ்ஸில் கட்டணம் ரூ. 850-ம், சென்னை - கோவைக்கு ரூ. 600, சென்னை - மதுரைக்கு ரூ. 750 என வழக்கமான கட்டணமே கடைசி நேரத்தில் வரும் பயணிகளிடம் பெரும்பாலான ஆம்னி பஸ்கள் வசூலித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இதுபோன்ற பண்டிகை காலங்களில் தாம்பரம் பகுதியில் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டு, பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவர். இங்கு நிற்கும் பஸ்களில் கடைசி நேரத்தில் பயணிக்க வரும் பயணிகளிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

இதுபோல் இம்முறையும் நவம்பர் 9, 10, 11 தேதிகளில் 5-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் இம்முறை நிரம்பாததால், அந்த பஸ்கள் இயக்கப்படாமல் அங்கேயே தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

பொங்கலுக்கு முன்பதிவு: இம்முறை தீபாவளி பண்டிகைக்கு அரசு பஸ்களில் முன்பதிவு மூன்று மாதங்களுக்கு முன்பே செய்யும் வகையில் வசதி செய்யப்பட்டது. ஆனால், சிறப்பு பஸ்களில் முன்பதிவு, பண்டிகைக்கு ஒரு வார காலத்துக்கு முன்பு மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

எனவே, வரவுள்ள பொங்கல் பண்டிகைக்கு இதுபோன்று அல்லாமல், சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்ய குறைந்தபட்சம் 20 நாள்களுக்கு முன்பு அனுமதிக்க வேண்டும். இதன் மூலம், ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை முற்றிலுமாகத் தடுக்க முடியும் என்றார் அவர்.

ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அஃப்சல் கூறியது: தமிழக அரசு இம்முறை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்கியதால், ஆம்னி பஸ்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது உண்மைதான். எப்போதுமே இல்லாத அளவுக்கு, முதன் முறையாக இந்த தீபாவளிக்கு பெரும்பாலான ஆம்னி பஸ்களில் 30 சதவீத இருக்கைகள் காலியாகச் சென்றன.

முன்பதிவு செய்த டிக்கெட்டுகளால் மட்டுமே, பஸ்கள் முழுமையாகச் சென்றன. கூடுதல் பயணிகளை எதிர்பார்த்து கடைசி நேரத்தில் இயக்கிய பஸ்கள் அனைத்திலும் 70 முதல் 80 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரம்பின என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.