கணக்கு தணிக்கைத் துறை ஊழியர்களுக்கான வீட்டு வசதித் திட்டத்தில் ஊழல்
சென்னையில் கணக்கு தணிக்கைத் துறை அலுவலக ஊழியர்களுக்கான வீட்டு வசதித் திட்டத்தில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக அதிர்ச்சியான


சென்னையில் கணக்கு தணிக்கைத் துறை அலுவலக ஊழியர்களுக்கான வீட்டு வசதித் திட்டத்தில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு கணக்கு தணிக்கைத் துறை அலுவலக கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் சென்னை ஜமீன் பல்லாவரத்தில் வீட்டுமனை வழங்கும் திட்டத்தை 1989ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அப்போது இந்தத் திட்டத்தில் 96 பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். இத் திட்டத்துக்காக பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையில் நிலமும் வாங்கப்பட்டது. எனினும் பல்லாவரம் நகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ.விடம் முறைப்படியான அனுமதி பெறாமல் பல ஆண்டுகளாக இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
சி.எம்.டி.ஏ. அனுமதி உள்ளிட்ட தேவையான அனுமதிகளைப் பெற்று, திட்டத்தில் சேர்ந்த உறுப்பினர்களுக்கு மனைகளைப் பிரித்து வழங்கும்படி ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி ஜமீன் பல்லாவரத் திட்ட வீட்டு மனைகளுக்கு சி.எம்.டி.ஏ. ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அடுத்த ஒரு வாரத்திலேயே அதாவது கடந்த மார்ச் 28ஆம் தேதி 14 பேர் பல்லாவரம் சார்பு பதிவாளர் அலுவலகத்தில் தங்கள் மனைகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
எனினும் அவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் 1989ஆம் ஆண்டின் திட்டத்தில் உறுப்பினர்களாக சேராதவர்கள் என்றும், திட்டம் தொடங்கிய காலத்தில் உறுப்பினர்களாக சேராதவர்களுக்கு தற்போது அவரச அவசரமாக வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
அதிலும் ஒரே நபருக்கு 3 மனைகள் ஒதுக்கப்பட்டு அவை பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மனைகளில் இரண்டு மட்டுமே வீட்டு மனைகள் என்றும், தபால் நிலையம், காவல் நிலையம் போன்ற பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மனைகளில் இருந்து அவருக்கு ஒரு மனையை ஒதுக்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட திட்ட உறுப்பினர்கள் குமுறுகின்றனர்.
மேலும், உண்மையான உறுப்பினர்களுக்கு மனைகள் ஒதுக்கீடு செய்வதிலும்கூட எவ்வித வரைமுறையையும் பின்பற்றாமல், கூட்டுறவு சங்க அதிகாரிகள் தங்கள் இஷ்டப்படி செயல்பட்டு உறுப்பினர்களிடையே பெரும் பாகுபாட்டை ஏற்படுத்தியுள்ளதாக புகார்கள் கூறப்படுகின்றன. 1989ஆம் ஆண்டில் ரூ.19 ஆயிரத்து 500 செலுத்தி திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்த ஒருவருக்கு தற்போது 904 சதுர அடி கொண்ட மனை மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம். எனினும் அவரை விடக் குறைவாக ரூ.9,300 மட்டுமே செலுத்தி அப்போது உறுப்பினராக சேர்ந்தவருக்கு தற்போது 1,162 சதுர அடி கொண்ட 2 மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
1989ஆம் ஆண்டு ஜமீன் பல்லாவரத்தில் வீட்டு மனை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய காலத்தில் நிச்சயமாக பெரும் வரவேற்பு இருந்திருக்காது. ஆனால் அன்றைய நில மதிப்போடு ஒப்பிடும்போது இன்று அதன் விலை பல நூறு மடங்கு அதிகரித்து விட்டது. தற்போது அங்கு ஒரு வீட்டு மனை சொந்தமாக இருந்தால் அது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பெரும் சொத்து என்ற நிலை உருவாகி விட்டது.
இந்தச் சூழலில் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த ஜமீன் பல்லாவரம் வீட்டு மனை வழங்கும் திட்டத்துக்கு இப்போது சி.எம்.டி.ஏ. ஒப்புதல் பெறப்பட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
இவ்வாறு மனைகளை ஒதுக்கியதில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இது பற்றி விரிவான விசாரணைக்கு கணக்குத் தணிக்கைத் துறை நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரி கடந்த 16ஆம் தேதி கூடிய எம்.சி.ஏ.ஏ. என்ற ஊழியர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தமிழ்நாடு கணக்கு தணிக்கைத் துறை அலுவலக கூட்டுறவு வீடு கட்டும் சங்க நிர்வாக சபைக்கான தேர்தல் அண்மையில் நடத்தப்பட்டு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விரைவிலேயே சபை நிர்வாகிகள் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இவ்வளவு அவசர அவசரமாக அதிகாரிகள் வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்வது ஜனநாயக மரபுகளை மீறிய செயல் என்றும் அந்த ஊழியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதற்கிடையே முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறையில் புகார் அளிக்கவும், நீதிமன்றத்தை அணுகி நியாயம் பெறவும் பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் சிலர் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...