ஆபத்து நேரங்களில் செல்பேசியில் ஏதாவது ஒரு பட்டனை அழுத்தினால் அவசர உதவிக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்படும் வகையில் புதிய மென்பொருளை உருவாக்கியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பொறியியல் மாணவர் எல்.ஆர்.சஞ்சீவி.
ஆபத்தில் சிக்கி இருப்பவர்கள் இருக்கும் இடத்தையும் இந்த மென்பொருள் காண்பித்துவிடும் என்பதுதான் இதன் சிறப்பு. "ரிஸ்கியூ மி' என்ற இந்த மென்பொருளைப் பெற பொதுமக்கள் ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டியதில்லை. "ஆண்ட்ராய்டு' அப்ளிகேஷனுடன் கூடிய செல்பேசி இருந்தால் போதுமானது.
சென்னையை அடுத்த தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதியாண்டு படித்து வரும் எல்.ஆர். சஞ்சீவி என்ற மாணவர்தான் இந்த அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளார்.
பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், கொள்ளை சம்பவங்களைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த மென்பொருளை உருவாக்கியதாக சஞ்சீவி தெரிவித்தார்.
எப்படி பயன்படுத்துவது? முதலில் "ரிஸ்கியூ மி' மென்பொருளை செல்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப செல்பேசியின் பக்கவாட்டில் உள்ள சத்தத்தை அதிகரிக்கும் பட்டன் அல்லது ஏதாவது ஒரு பட்டனை தேர்வு (பேட்டர்ன்) செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் மென்பொருள் கேட்கும் மூன்று வகையான விவரங்களை அளிக்க வேண்டும்.
முதல்நிலை விவரத்தில் பெயர், ரத்த வகை (குரூப்), பிற மருத்துவ விவரங்கள், முகவரி, அவசர காவல் உதவி எண், மருத்துவ உதவி எண், தீயணைப்புத் துறை எண் ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும். இரண்டாம் நிலை விவரத்தில் குடும்பத்தாரின் செல்பேசி, தொலைபேசி எண்களை அளிக்க வேண்டும். மூன்றாம் நிலையில் பிற உதவி எண்களை டைப் செய்து கொள்ளலாம்.
பயணம் செய்யும்போது, இந்த மென்பொருளை திறந்து அதிலுள்ள "ஸ்டார்ட்' என்ற பட்டனை அழுத்தினால், வேலை செய்ய ஆரம்பித்துவிடும். ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பாக இருக்கிறீர்களா அல்லது ஆபத்தில் சிக்கியிருக்கிறீர்களா என கேட்டுக் கொண்டே இருக்கும். அவ்வாறு செல்பேசி ஒலிக்கும்போது "ஸ்டாப்' பட்டனை அழுத்திவிடலாம்.
ஒருவேளை ஆபத்தில் சிக்கியிருக்கிறீர்கள் என்றால், மென்பொருளுக்கு தேர்வு செய்துள்ள (பேட்டர்ன்) பட்டனை இரண்டு முறை அழுத்தினால் மருத்துவ அவசர உதவிக்கும், 4 முறை அழுத்தினால் பெண்களுக்கு எதிரான ஆபத்து உதவிக்கும், 6 முறை அழுத்தினால் போலீஸ் அவசர உதவிக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு விடும்.
இதுகுறித்து மாணவர் சஞ்சீவி கூறியது: இந்த மென்பொருளின் சிறப்பு என்னவென்றால், எஸ்.எம்.எஸ். அனுப்பும்போதே, ஆபத்தில் உள்ளவர் எந்தவிதமான பிரச்னையில் சிக்கியுள்ளார் என்பது தெரிந்துவிடும் என்பதோடு ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தின் மூலம் அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதையும் அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் ஆபத்தில் சிக்கிய ஒருசில நிமிடங்களிலேயே காப்பாற்றிவிட முடியும்.
பெண்கள், வீட்டில் தனியாக இருக்கும் வயதானவர்கள், வங்கி ஏ.டி.எம். மைய காவலாளிகள், வங்கிகளுக்கு தினமும் வேன் மூலம் பணம் எடுத்துச் செல்பவர்கள் ஆகியோருக்கு இந்த மென்பொருள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
இதை உருவாக்க 6 மாதங்கள் ஆனது. "ஜாவா' புரோகிராமை பயன்படுத்தி இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் முறையாக வேலை செய்கிறது என்பதற்கு சென்னை ஐஐடி ஆய்வு செய்து சான்றிதழ் அளித்திருக்கிறது.
இதற்கென தனி கட்டணமில்லா எண் ஒன்றை ஏற்படுத்தித் தர தமிழக அரசு உதவுமானால், இந்த மென்பொருளை மேலும் பயனுள்ளதாக ஆக்கிவிட முடியும். இதற்காக அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்கமளிக்க திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்.
சமூகத்தின் இப்போதைய தேவையை உணர்ந்து சிறந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ள சஞ்சீவி ஏற்கெனவே, வெளியிலிருந்தபடி செல்பேசி உதவியுடன் வீட்டிலிருக்கும் கம்ப்யூட்டரை இயக்கக் கூடிய "சாண்ட்ராய்ட்' மென்பொருள், மாணவர்களின் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களை பராமரிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு உதவக் கூடிய "அதினா' மென்பொருள் மற்றும் "சாண்ட்ரா ரேட்' என்ற செல்பேசியை கம்ப்யூட்டர் மூலம் கட்டுப்படுத்தும் மென்பொருள் என தொடர் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வேயில் ஆள்குறைப்பு நடவடிக்கை கூடாது: இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

பாக்கெட் நாவல் அனுபவம் பகிர்ந்த மாளவிகா மோகனன்!

கடல்காற்று வீசுவதால் கவலையில்லை... பந்துவீச்சு குறித்து ஷுப்மன் கில்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


