சுகாதாரச் சீர்கேட்டில் வில்லிவாக்கம் பஸ் நிலையம்
சென்னையின் முக்கியப் பகுதியாக விளங்கும் வில்லிவாக்கம் பஸ் நிலையம் மிகுந்த சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கி வருகிறது.


சென்னையின் முக்கியப் பகுதியாக விளங்கும் வில்லிவாக்கம் பஸ் நிலையம் மிகுந்த சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கி வருகிறது.
இந்த பஸ் நிலையத்தில் கேட்பாரற்று திரியும் மாடுகளால் போக்குவரத்துக்கும் பயணிகளுக்கும் மிகவும் இடையூறாக இருந்து வருகிறது.
இந்தப் பஸ் நிலையத்திலிருந்து பிராட்வே, கோயம்பேடு, அண்ணா சதுக்கம், திருவான்மியூர், எழும்பூர், அடையாறு, தியாகராய நகர், சைதாப்பேட்டை, திருவேற்காடு, அம்பத்தூர் உள்பட சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 92 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை நாளொன்றுக்கு 540 தடவை இயக்கப்பட்டு வருகின்றன.
வில்லிவாக்கம் பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும் சாதாரண மற்றும் சொகுசு பஸ்களில் நாள் ஒன்றுக்கு 7,000 முதல் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். அதிகமான நபர்கள் வந்து செல்லும் இந்த பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்கான இருக்கை வசதிகள் இல்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் அவதியுறுகின்றனர்.
மாடுகளின் ஆதிக்கம்: அதிக எண்ணிக்கையிலான பயணிகள் வந்து செல்லும் வில்லிவாக்கம் மாநகராட்சி பஸ் நிலையத்தைச் சுற்றிலும் மாடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், தெருவில் உள்ள இதர மாடுகளும் அதிகளவில் இங்கு உலா வருகின்றன. இந்த மாடுகள் பஸ் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றன. மாடுகளின் கழிவுகளினால் பஸ் நிலையம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மாடுகளின் கழிவுகளை மிதித்துக் கொண்டுதான் பயணிகள் பஸ்ஸில் ஏற வேண்டியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால் பயணிகள் முகச்சுழிப்புடன்தான் பயணம் செய்யவேண்டியிருக்கிறது.
இந்தப் பஸ் நிலையத்தில் நேரக்காப்பாளர் அறைக்கு அருகில் கழிவறைகள் இருந்தாலும் அவை பொதுமக்கள் பயன்படுத்த முடியாதவாறு பூட்டியே வைக்கப்பட்டுள்ளன. இதனை பஸ் நிலைய அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். பஸ் நிலையத்தின் ஓரமாக 2012-2013-ஆம் ஆண்டு 95-ஆவது மாமன்ற உறுப்பினரின் நிதியிலிருந்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ரூ. 10 லட்சம் செலவில் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவையும் நீண்டகாலமாக திறக்கப்படாமல் உள்ளன. கழிவறைகள் இல்லாததால் பயணிகள் பஸ் நிலைய வளாகத்தையே கழிப்பிடமாகப் பயன்படுத்துவதால் அந்தப் பகுதி முழுவதும் அசுத்தமாகக் காட்சியளிக்கிறது.
இதன் காரணமாக வில்லிவாக்கம் பஸ் நிலையம் முழுவதும் துர்நாற்றத்துடனும் கடும் சுகாதார சீர்கேட்டுடனும் காணப்படுகிறது.
மாடுகள் மற்றும் மனிதர்களின் சிறுநீர் மற்றும் கழிவுகள் மழையின் காரணமாக ஆங்காங்கே குளம் போல் தேங்கி நிற்பதால் அதில் டெங்கு, மலேரியா, யானைக்கால் நோய் ஆகியவற்றை உருவாக்கும் கொசுக்களின் உற்பத்திக் கூடமாக பஸ் நிலையம் மாறி வருகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: மாநகராட்சி அதிகாரிகளிடம் எத்தனையோ முறை புகார் கொடுத்தாலும் இதுவரை உரிய நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
மாநகராட்சி அதிகாரிகள் மாடுகளை அப்புறப்படுத்த முயன்றால், மாடுகளை எங்கள் இடத்தில்தான் கட்டியுள்ளோம் என்றும் இந்த மாடுகள் எங்களுடையது அல்ல என்றும் பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள வீடுகளில் மாடுகளை வளர்ப்போர் கூறுகின்றனர்.
பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் மட்டுமே சுற்றுச்சுவர் இருப்பதுதான் இதற்குக் காரணம். அனைத்துப் பகுதிகளிலும் சுற்றுச்சுவரைக் கட்டினால்தான் இது போன்று மாடுகள் வருவது தடுக்கப்படும். மேலும், மாநகராட்சி அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்து பஸ் நிலையத்தை சுற்றி வரும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும்.
சுகாதாரச் சீர்கேட்டைப் போக்க பொதுமக்களுக்காக கட்டப்பட்ட கழிவறைகளை உடனே திறக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...