டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அடிப்படை வசதிகள் இன்றி செயல்படும் பசுமைத் தீர்ப்பாயம்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு போதிய அடிப்படை

News image
Updated On :18 பிப்ரவரி 2013, 10:51 pm

வி.தேவதாசன்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு போதிய அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டு வருகிறது.

நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி செயல்படுத்தப்படும் திட்டங்களை தடுத்து நிறுத்தி, சுற்றுச்சூழல் விதிகளை அமல்படுத்தப்படுவதை உறுதி செய்திடவும் பசுமைத் தீர்ப்பாயம் செயல்பட்டு வருகிறது. இந்தத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு புது தில்லியில் உள்ளது.

இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கான தென்மண்டல அமர்வு கடந்த அக்டோபர் 30-ம் தேதி முதல் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

நீதித்துறை உறுப்பினர் எம்.சொக்கலிங்கம், துறைசார் நிபுணத்துவ உறுப்பினர் ஆர். நாகேந்திரன் ஆகியோரைக் கொண்ட இந்த அமர்வில் முதலில் வெறும் 16 வழக்குகள் மட்டுமே இருந்தன. ஆனால் நாளுக்கு நாள் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இப்போது சுமார் 150 வழக்குகள் விசாரணைக்காக உள்ளன. புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது விசாரணை முடிந்து, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளை இந்தத் தீர்ப்பாயம் விசாரித்து வந்தாலும், தீர்ப்பாயத்துக்கான பல அடிப்படை வசதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

குறிப்பாக இந்தத் தீர்ப்பாயத்துக்காக ஒரு கூடுதல் பதிவாளர், ஒரு உதவிப் பதிவாளர், ஒரு பிரிவு அதிகாரி, 2 உதவியாளர்கள், 4 தனிச் செயலாளர்கள், ஸ்டெனோகிராபர்கள் மற்றும் கோர்ட் மாஸ்டர்கள் 4 பேர், டி பிரிவு ஊழியர்கள் 2 பேர், இந்தி மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மற்றும் கணக்காளர் ஒருவர் என மொத்தம் 17 நிரந்தர ஊழியர்கள் பணிபுரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், கூடுதல் பதிவாளர் ஒருவர் மட்டுமே இப்போது நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டெனோகிராபர்கூட இல்லாத நிலையில்தான் தீர்ப்பாயத்தின் இந்த அமர்வு இப்போது செயல்பட்டு வருகிறது.

ஆலோசகர்கள் ("கன்சல்டண்ட்ஸ்') என்ற வகையில் 4 பேரும், அலுவலக அடிப்படை உதவியாளர்கள் 4 பேரும் ஒப்பந்த அடிப்படையில் தாற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேவையான ஊழியர்களை மத்திய அரசு உடனடியாக நியமித்திட வேண்டும் என்று வழக்குரைஞர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த வழக்குரைஞர் ஆர். நீலகண்டன், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் உயர் நீதிமன்றங்களில் உள்ள சுற்றுச்சூழல் பிரச்னைகள் தொடர்பான வழக்குகள் பசுமைத் தீர்ப்பாயத்துக்கு மாற்றப்படுதல் ஆகியவற்றால் இந்தத் தீர்ப்பாயத்தில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை விரைவிலேயே 1,000-க்கும் மேல் அதிகரிக்கக்கூடும். ஆகவே, அதற்கேற்ப வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

தற்போது உள்ள கட்டடத்தில் நீதிமன்ற அறை விசாலமானதாக இல்லை. வழக்குரைஞர்கள் அமர்வதற்கும் போதிய இடவசதி இல்லை. இந்தக் கட்டடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் போதுமானதாக இல்லை.

மேலும், உயர் நீதிமன்றத்தில் வழக்குகளில் ஆஜராகும் வழக்குரைஞர்கள் அங்கிருந்து கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கடந்து நீண்ட தொலைவு பயணித்து அரும்பாக்கத்தில் உள்ள தீர்ப்பாயத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.

ஆகவே, இதையெல்லாம் தவிர்க்கும் வகையில் போதுமான வசதிகளுடன் நகரின் மையப் பகுதியில் குறிப்பாக உயர் நீதிமன்ற வளாகத்திலேயே பசுமைத் தீர்ப்பாயத்தின் அமர்வு செயல்பட இடம் ஒதுக்கப்பட்டால் பொதுமக்கள் உள்பட அனைவருக்குமே பெரும் பயன்கள் கிடைக்கும் என்கிறார் நீலகண்டன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.