துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்தில் கூடுதல் வசதிகள்
எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்தில் சாலை அகலம் அதிகரிப்பு, தடுப்புச் சுவர் உள்ளிட்டவைகள் கூடுதலாக அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.


எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்தில் சாலை அகலம் அதிகரிப்பு, தடுப்புச் சுவர் உள்ளிட்டவைகள் கூடுதலாக அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ரூ.600 கோடியிலான துறைமுக இணைப்புச் சாலைத் திட்டப்பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் எண்ணூர் விரைவு, பொன்னேரி நெடுஞ்சாலை உள்ளிட்டவை 6 வழிச் சாலையாக அகலப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், மாதவரம் உள்வட்டச் சாலையும் (ஐ.ஆர்.ஆர்.), மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஆகியவை ஏற்கெனவே இருந்தபடியே வலுவூட்டம் செய்யும் பணிகள் மட்டும் நடைபெற்று வந்தது. இதன்படி இரண்டுபுறமும் தலா 7 மீட்டர் அகலத்திற்கு மட்டுமே சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டன. அதிகமான கனரக வாகனங்கள் செல்லும் இச்சாலையின் தற்போதைய அகலம் போதாது என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய சென்னை மண்டல மேலாளர் ஐ.ஜி.ரெட்டி, திட்டப் பொறியாளர் பி.டி.மோகன் கடந்த சில நாள்களுக்கு முன்பு இச்சாலைகளை நேரில் ஆய்வு செய்தனர். இதனையடுத்து எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சாலையை இருபுறமும் மேலும் தலா 5 மீட்டர் அகலம் அதிகரிக்க திட்டப் பணிகளில் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ராமகிருஷ்ணாநகர் முதல் சென்னை உரத் தொழிற்சாலை வரை சுமார் 5.4 கி.மீ. தூரத்திற்கு இப்பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இச்சாலையில் தற்போது நிலவி வரும் நெரிசல் குறையும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாதவரத்தில் 60 அடி அகலத்திற்கு கண்டெய்னர் லாரிகள் நிறுத்தி வைக்கும் வசதி: ஏற்றுமதி ஆவனப் பரிசோதனைக்காக வரும் நூற்றுக்கணக்கான லாரிகள், கண்டெய்னர் லாரிகள் மாதவரம் உள்வட்டச் சாலையில் தினசரி வரிசை கட்டி நிற்கின்றன. இதனால் இச்சாலையைப் பயன்படுத்தும் பொதுமக்களின் வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கும் அவல நிலை குறித்து புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இது குறித்து ஆய்வு நடத்திய அதிகாரிகள் இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் தற்போதைய சாலையை ஒட்டி இரு புறமும் தலா 30 அடி அகலத்திற்கு கண்டெய்னர் லாரிகளை நிறுத்தி வைக்கும் வசதிகள் ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் கண்டெய்னர் லாரிகள் வரிசை உள்வட்டச் சாலையில் இருக்காது. நெரிசலும் ஏற்படாது.
கடலரிப்புத் தடுப்புச் சுவர்: எண்ணூர் விரைவு சாலையில் ஆறு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ராமகிருஷ்ணா நகர் அருகே தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடலரிப்பால் இச்சாலை எதிர்காலத்தில் துண்டாகும் அபாயம் இருந்து வந்தது. இப்பகுதியை ஆய்வு செய்த அதிகாரிகள் உடனடியாக 100 மீட்டர் தூரத்திற்கு தடுப்புச் சுவர் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.
துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டப் பணிகள் நிறைவடையும்போது வடசென்னையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் என்ற நிலை இருந்து வருகிறது. மாநில அரசு, கப்பல் போக்குவரத்துத் துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உள்ளிட்டவைகளின் கூட்டு பங்கேற்பில் நிறைவேற்றப்பட்டுவரும் திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பணி விரைவாக உள்ளது. இதர தரப்பினரும் தங்களது ஒத்துழைப்பினை விரைந்து நல்கினால் இத்திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேறுவதில் சிரமம் இருக்காது என்பதே எதார்த்தநிலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...