/

கோயம்பேடில் பஸ்ஸூக்காக விடிய விடிய காத்திருந்த பயணிகள்

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பயணிகள் விடிய விடிய காத்திருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் நிலை உருவானது.

Updated On :13 ஜனவரி 2013, 10:12 pm

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பயணிகள் விடிய விடிய காத்திருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் நிலை உருவானது.

ஆசியாவிலேயே மிகப் பெரிய பஸ் நிலையமான கோயம்பேடு பஸ் நிலையத்தில் 270 பஸ்களை நிறுத்தக்கூடிய அளவுக்கு "பஸ் பேக்கள்' அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரே நேரத்தில் அதிகபட்சம் 2000 பஸ்களை கையாள முடியும்.

கடந்த தீபாவளியின்போது தமிழகம் முழுவதும் 6859 சிறப்பு பஸ்களை தமிழக அரசு இயக்கியது. சென்னையிலிருந்து மட்டும் கூடுதல் சிறப்பு பஸ்களாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 700 பஸ்கள் அளவுக்கு இயக்கப்பட்டன. அப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக அடுத்து வரும் முக்கிய பண்டிகைக் காலங்களில் கூடுதல் பஸ்களை கையாள சிறப்பு வசதிகளை அரசு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொங்கல் பண்டிகைக்கும் அதே பிரச்னை எதிரொலித்தது. தீபாவளியைப்போல் பொங்கலுக்கும் அதே எண்ணிக்கையில் சென்னையிலிருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டபோதும், அவை அனைத்தும் கோயம்பேடு பஸ் நிலையத்திலேயே கையாளப்பட்டன. பஸ்களை நிறுத்தி வைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதன் காரணமாக இம்முறையும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை (ஜனவரி 11) நள்ளிரவு 2.30 மணி வரை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

சனிக்கிழமை போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்ததால், பயணிகளும், பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் உரிய நேரத்துக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.

பயணி புகார்

"தீபாவளி பண்டிகையின்போதே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். அதைக் கருத்தில் கொண்டு இப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தவறி விட்டனர். இதனால், சனிக்கிழமை இரவு 10 மணிக்கு பஸ் நிலையத்துக்கு வந்த நான், ஞாயிறு அதிகாலை 5 மணிக்குத்தான் பஸ் ஏறினேன் என கோவையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் கூறினார்.

இதேபோல் சனிக்கிழமை இரவு கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்த பெரும்பாலான பயணிகள், ஞாயிறு அதிகாலை 5.30 மணி வரை பஸ்ஸýக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

புதிய பஸ் நிறுத்தம்

கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்காக கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்துக்கு எதிரே உள்ள சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை வாங்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இடத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பு மட்டும் அவை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

எனவே, வரும் காலங்களிலும், பண்டிகை நேரங்களிலும் போக்குவரத்து நெரிசல் குறையும் என உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.