நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கிழக்கு அண்ணா நகர் ரயில் நிலையத்தை எட்டியது டனல் போரிங் இயந்திரம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் டனல் போரிங்

News image
Updated On :18 ஜூன் 2013, 10:07 pm

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் டனல் போரிங் இயந்திரம் கிழக்கு அண்ணா நகர் ரயில் நிலையத்தை எட்டியுள்ளது.

இதன் காரணமாக கிழக்கு அண்ணா நகர் மெட்ரோ ரயில் நிலையப் பணிகள் விறுவிறுப்பு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஷெனாய் நகரில் இருந்து திருமங்கலம் வரையில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் 800 மீட்டருக்கு நிறைவடைந்துள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் சுரங்கத்தில் அமையவிருக்கும் மெட்ரோ ரயில் நிலையப் பணிகளும், சுரங்க வழிப்பாதை பணிகளும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளில் டனல் போரிங் இயந்திரம் முதல்முறையாக சைதாப்பேட்டையை சென்றடைந்துள்ளது. இதனையடுத்து இப்போது இரண்டாவதாக கிழக்கு அண்ணா நகர் ரயில் நிலையத்துக்கு டனல் போரிங் இயந்திரம் சென்றடைந்துள்ளது.

ஷெனாய் நகரில் இருந்து திருமங்கலம் சுரங்கப் பாதை 2,797 மீட்டருக்கு தோண்டப்பட வேண்டும். இப்போது இந்தப் பணி 800 மீட்டர் அளவுக்கு சென்றுள்ளது. இன்னும் 8 மாத காலத்துக்குள் இவ்வழித்தடத்திலான அனைத்துப் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 45 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில், 24 கிலோ மீட்டர் தொலைவு சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது. வண்ணாரப்பேட்டை முதல் திரிசூலம் விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் பாதையில், வண்ணாரப்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை சுரங்கப் பாதையிலும், சைதாப்பேட்டை முதல் விமான நிலையம் வரை மேம்பாலம் வழியாகவும் ரயில் பாதை அமைக்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் திட்டத்தில், சுரங்க ரயில் பாதைகள் அமைப்பதற்கு, சீனா மற்றும் ஜெர்மனியில் இருந்து 12 டனல் போரிங் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்பது இயந்திரங்கள் சீனாவில் இருந்தும், 3 இயந்திரங்கள் ஜெர்மனியில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளன.

இப்போது வண்ணாரப்பேட்டையில் இருந்து எழும்பூர் வரையிலான 2 வழித்தடத்திலும், மே தின பூங்காவில் இருந்து சென்ட்ரல் மற்றும் ஜெமினி வரையிலும், சைதாப்பேட்டையில் முதல் ஜெமினி வரையிலும், நேரு பூங்காவில் இருந்து எழும்பூர் மற்றும் ஷெனாய் நகர் வரையிலும், ஷெனாய் நகர் முதல் திருமங்கலம் வரை பாதையிலும் டனல் போரிங் இயந்திரங்கள் மெட்ரோ ரயில் பாதைக்கான சுரங்கம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. சுரங்கம் அமைக்கும் பணிகள் 2014-ஆம் ஆண்டு இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.