/

விரைவில் சென்னையில் அமைகிறது கல்லூரிகளுக்கான அங்கீகார மையம்

தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (நேக்) அங்கீகாரம் பெற்ற மையம் விரைவில் சென்னையில் அமையவுள்ளது என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

Updated On :11 அக்டோபர் 2013, 10:56 pm

தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (நேக்) அங்கீகாரம் பெற்ற மையம் விரைவில் சென்னையில் அமையவுள்ளது என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

இந்த மையம் அமைக்கப்பட்டுவிட்டால், தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் "நேக்' அங்கீகாரம் பெற அலைய வேண்டியிருக்காது என்பதோடு நடைமுறைகளும் விரைவாக முடிக்கப்பட்டுவிடும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மானியங்களை அளிப்பது, ஆராய்ச்சி மேம்பாட்டுக்கு மானியம் அளிப்பது உள்ளிட்ட பணிகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மேற்கொண்டு வருகிறது.

யுஜிசி 2012 ஒழுங்கு நடைமுறைகளின்படி, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அல்லாத பிற உயர் கல்வி நிறுவனங்கள் (பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள்) அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்கியுள்ளது. இவ்வாறு கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக "நேக்' என்ற அமைப்பை யுஜிசி உருவாக்கியுள்ளது. கடந்த 1994-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த "நேக்' பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த அங்கீகாரத்தைப் பெற பல்வேறு நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் கல்வி நிறுவனத்தை "நேக்' அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அங்கீகாரம் அளிப்பர். இந்த அங்கீகாரம் பெற்றால் மட்டுமே, யுஜிசி-யின் மானியங்கள் மற்றும் பிற உதவிகளை பெற முடியும்.

குறிப்பாக, கல்வியியல் கல்லூரிகள் 100 பி.எட். இடங்களுக்கு மேல் மாணவர் சேர்க்கையை மேற்கொண்டு நடத்துவதற்கும், எம்.எட்., படிப்பை நடத்துவதற்கும் "நேக்' அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் இந்தப் படிப்புகளை நடத்த முடியாது. நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான உயர் கல்வி நிறுவனங்களுக்கு இதுபோன்று அங்கீகாரத்தை "நேக்' அளிப்பதோடு, ஒவ்வொரு ஆண்டும் அதை புதிப்பிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் ஏற்படும் வேலைப்பளு மற்றும் கால தாமதத்தை குறைக்கும் வகையில், அந்தந்த மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட (நோடல்) "நேக்' மையத்தை அமைக்க யுஜிசி திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில உயர்கல்வி மன்றத்தை இதற்கான பொறுப்பு மையமாக யுஜிசி தேர்வு செய்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு உயர் கல்வி மன்ற உறுப்பினர் செயலர் கரு. நாகராஜன் கூறியது:

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு விரைவாக அங்கீகாரம் அளிக்கும் வகையில், இங்கேயே அங்கீகாரம் பெற்ற "நேக்' மையம் அமைக்கப்பட வேண்டும் என யுஜிசி சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தது. தமிழக உயர் அதிகாரிகளும் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இங்கு அமைக்கப்படும் மையத்தை மாநில உயர் கல்வி மன்றம்தான் நிர்வகிக்கும். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.