/

"அபே' ஆட்டோக்கள் மீதும் வருகிறது அதிரடி நடவடிக்கை

சென்னையில் பெர்மிட் இல்லாமல் இயங்கி வரும் ஆட்டோக்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்து "அபே' ஆட்டோக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை முனைந்துள்ளது.

News image
Updated On :20 செப்டம்பர் 2013, 9:46 pm

சென்னையில் பெர்மிட் இல்லாமல் இயங்கி வரும் ஆட்டோக்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்து "அபே' ஆட்டோக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை முனைந்துள்ளது.

சென்னையில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த புதிய அறிவிப்பின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

அதோடு, சென்னையில் பெர்மிட் இல்லாமல் இயங்கி வந்த ஆட்டோக்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். நடவடிக்கை தொடங்கிய 5 நாள்களில், பெர்மிட் இல்லாமல் இயங்கி வந்த 600-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் சாலைப் போக்குவரத்துக்கு தொடர்ந்து இடையூறாக இருந்து வரும் "அபே' ஆட்டோக்கள் மீதும் கடும் நடவடிக்கையை எடுக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

"அபே' ஆட்டோக்களுக்கு சென்னையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் பெர்மிட் பெற்ற ஆட்டோக்கள் இங்கு இயக்கப்படுகின்றன. தொடர் நடவடிக்கை எடுத்தபோதும் இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறி வருவதாக போக்குவரத்து போலீஸாரும் புகார் தெரிவிக்கின்றனர்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவு: "அபே' ஆட்டோக்கள் மீதும் தீவிர நடவடிக்கை எடுப்பது குறித்து போக்குவரத்துத் துறை ஆணையர் பிரபாகர ராவ் கூறியது:

சென்னையில் எல்.பி.ஜி. ஆட்டோக்கள் மட்டுமே இயங்க முடியும். இதன் காரணமாக கடந்த 2007-ஆம் ஆண்டில் "அபே' ஆட்டோக்களுக்கு சென்னையில் தடை விதிக்கப்பட்டது. ஆனால், பிற மாவட்டங்களில் இந்த தடை இல்லை.

இருந்தபோதும், தடை விதிப்பதற்கு முன்பு வரை சென்னையில் இயக்குவதற்கு பெர்மிட் பெற்ற "அபே' ஆட்டோக்கள் மட்டும் தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, பிற மாவட்ட "அபே' ஆட்டோக்கள் சென்னையில் இயக்கப்படுகின்றன.

இவர்கள் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை கூடுதலாக நபர்களை ஏற்றிச் செல்வதோடு, விபத்துகள் ஏற்படுவதற்கும் காரணாக இருக்கின்றனர்.

இதை ஒழுங்குபடுத்தும் வகையில், "அபே' ஆட்டோக்கள் மீது சோதனையை தீவிரப்படுத்துமாறு கடந்த 5-ஆம் தேதி அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சோதனையில், 2007-ஆம் ஆண்டுக்குப் பின் பெர்மிட் பெற்று சென்னையில் இயக்கப்பட்டு வரும் அனைத்து ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அவை தொடர்ந்து இயங்க தடை விதிக்கப்படும்.

அதோடு, 2007-க்கு முன்னர் பெர்மிட் பெற்று இயங்கி வரும் ஆட்டோக்களும் சேதனைக்கு உள்படுத்தப்பட்டு, என்ஜின் சேசிஸ் எண்கள் சரியாக உள்ளதா என்பதும் ஆராயப்படும். இந்த எண்ணில் மாற்றம் இருந்தால், அந்த ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து இயங்க தடை விதிக்கப்படும்.

மேலும் இவர்களுக்கும் ஆட்டோ பெர்மிட்தான் வழங்கப்பட்டுள்ளது. எனவே, "அபே' ஆட்டோக்களிலும் மூன்று நபர்களை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும். கூடுதல் நபர்களை ஏற்றிச் சென்றால் முதல் முறை ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறையாக பிடிபட்டால் பெர்மிட் ரத்து செய்யப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.