நிர்வாகக் கமிட்டி இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் பராமரிப்பு பணிகள் முடக்கம்
கோயம்பேடு மார்க்கெட்டில் நிர்வாகக் கமிட்டி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்கெட் வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


கோயம்பேடு மார்க்கெட்டில் நிர்வாகக் கமிட்டி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்கெட் வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையான சென்னை கோயம்பேடு மார்க்கெட் 1996-ஆம் ஆண்டு 295 ஏக்கர் பரப்பளவில் திறக்கப்பட்டது. இங்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் என 3190 கடைகள் உள்ளன. இங்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து சில்லறை வியாபாரிகளும், லட்சக்கணக்கான பொது மக்களும் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மீண்டும் நிர்வாகக் குழு (மார்க்கெட் கமிட்டி) அமைக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் கூறியது:
கோயம்பேடு மார்க்கெட்டில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ) கீழ் மார்க்கெட் கமிட்டி உருவாக்கப்படும். இந்த கமிட்டி, மார்க்கெட்டில் வியாபாரிகள் கடைகள் வைக்க உரிமம் வழங்குதல், பராமரிப்புக் கட்டணம் நிர்ணயித்தல் போன்றவற்றையும், வியாபாரிகளின் நலன் கருதி சாலை வசதி, குப்பைகளை அகற்றுதல், தெருவிளக்கு சரிசெய்தல், கழிவு நீர் வெளியேற்றம், உரிமம் பெறாத கடைகள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுதல், தொழிலாளர்,வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதிகளை செய்து தருதல் உள்ளிட்ட பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும். மேலும் வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை நிறைவேற்ற தீர்மானங்களை இயற்றி, அரசுக்கு அனுப்பும் பணிகளை மேற்கொள்ளும்.
கடந்த 3 ஆண்டுகளாக மார்க்கெட் கமிட்டி நியமிக்கப்படவில்லை. இதனால் தற்போது கோயம்பேடு மார்க்கெட்டினை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) அதிகாரிகளே நிர்வகித்து வருகின்றனர். இங்கு கடைகள் வைத்திருப்பவர்களிடம் பராமரிப்புக் கட்டணம், மார்க்கெட்டிற்குள் வந்து செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் ஆகியவை சி.எம்.டி.ஏ. மற்றும் அதனால் நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மூலம் வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு சி.எம்.டி.ஏ. நிர்வாகம் வசூல் செய்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் உருவாகும் குப்பைகளை முழுமையாக அப்புறப்படுத்தல், குடிதண்ணீர் வசதி, கழிவுநீர் அகற்றம், உரிமம் இல்லாத, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கடைகளை அகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகாரிகளால் முழுவதுமாக செய்துதர முடியவில்லை. இதற்கு மார்க்கெட் கமிட்டி அமைக்கப்படாததே காரணம்.
மேலும் மார்க்கெட் பராமரிப்புப் பணிகள் உள்ளிட்டவற்றை செய்ய ஒப்பந்ததாரர்களை நியமிக்க முடியாமலும், புதிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முடிவெடுக்க முடியாமலும் அதிகாரிகள் திணறி வருகின்றனர் என்று தெரிவித்தனர்.
இது தொடர்பாக சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கூறியது:
மார்க்கெட் கமிட்டி மற்றும் அதற்கான உறுப்பினர்களை நியமிக்க 6 மாதங்களுக்கு முன்பே அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். தமிழக அரசின் வீட்டுவசதி துறை அமைச்சகம் தான் இதற்கான உத்தரவைப் பிறப்பிக்கும். மார்க்கெட் கமிட்டி அமைக்கப்படாததால் புதிதாக சில ஒப்பந்தங்களை போடமுடியாதது உண்மைதான். ஆனால் எங்களுடைய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி சில ஒப்பந்தங்களை நீட்டித்துள்ளோம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...