நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

சீனாவுக்கு கடத்தப்படும் எறும்புதின்னியின் செதில்கள்!

இந்தியாவில் வேட்டையாடப்படும் எறும்புதின்னியின் செதில்கள் சீனாவுக்கு அலங்காரப் பொருள்கள் செய்வதற்காக பெருமளவில் கடத்தப்படுவதாக வன உயிரின ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

News image
Updated On :3 ஏப்ரல் 2015, 10:41 pm

இந்தியாவில் வேட்டையாடப்படும் எறும்புதின்னியின் செதில்கள் சீனாவுக்கு அலங்காரப் பொருள்கள் செய்வதற்காக பெருமளவில் கடத்தப்படுவதாக வன உயிரின ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும், உலகிலேயே அதிகளவு வேட்டையாடப்படும் உயிரினமாக எறும்புதின்னிகள் இருப்பதால் அதிவிரைவாக அழிந்து வரும் நிலையில் இவை இருப்பதாக உலக வனவிலங்கு நிதியம் கவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் 2009 முதல் 2013-ஆம் ஆண்டு வரை 3,350 எறும்புதின்னிகள் கொல்லப்பட்டுள்ளதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தியாவில் எவ்வளவு எறும்புதின்னிகள் இப்போது உயிரோடு இருக்கின்றன என்பது குறித்த அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புத் தகவல்கள் இல்லை.

இருப்பினும் வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எறும்புதின்னிகளைக் கொல்வதற்கும், கடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடுமையான சட்டங்கள் இருந்தாலும் எறும்புதின்னிகள் தொடர்ந்து கொல்லப்பட்டு கடத்தப்பட்டு வருகின்றன.

கொல்லப்படுவது ஏன்? வெப்ப மண்டலப் பகுதிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய ஆசிய நாடுகளில் எறும்புதின்னிகள் காணப்படுகின்றன.

சீன நாட்டில் எறும்புதின்னிகள் குறித்து பல்வேறு மூட நம்பிக்கை உள்ளன. எறும்புதின்னிகளின் செதில்களைக் கொண்டு ஆபரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை அணிந்தால் நல்லது என சீனர்கள் நம்புகின்றனர். மேலும், பல்வேறு மருத்துவக் குணங்கள் இருப்பதாலும் இவை கொல்லப்பட்டுக் கடத்தப்படுகின்றன.

முதலில் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து எறும்புதின்னிகள் கடத்தப்பட்டன. இப்போது, அங்கு முழுவதுமாக எறும்புதின்னிகள் அழிக்கப்பட்டுவிட்டன. அதைத் தொடர்ந்து, இந்தியாவில் எறும்புதின்னிகள் கொல்லப்பட்டு கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கவசமாகும் செதில்கள்

எறும்புதின்னிகளை கட்டியான, தட்டையான செதில்களைக் கொண்டு அடையாளம் காணலாம். அச்சுறுத்தல் ஏற்படும்போது இது உருண்டையாக தலையை வாலுக்கடியில் பொருத்தி சுருண்டுகொள்ளும்.

அப்போது செதில்கள் கவசம் போல தற்காப்பினை அளிக்கின்றன. மேலும் ஆபத்து வேளைகளில், வெறுப்பூட்டுகிற, துர்நாற்றம் கொண்ட திரவத்தை ஆசனவாய்க்கு அருகில் இருக்கும் சுரப்பிகளிலிருந்து சுரக்கின்றன. இதன் நாற்றம் காரணமாக இதனைக் கொல்ல வரும் விலங்கினங்கள் துரத்தப்படுகின்றன.

இது ஒரு பாலூட்டி. பூச்சியுண்ணியாகிய இதன் முக்கிய உணவு எறும்புகள், கரையான்களே. பற்களற்ற இவை மெல்லும் தன்மையுடைவை. இவற்றின் ஆயுள்காலம் 12 ஆண்டுகளாகும். இவை பூமிக்கடியில் 11 அடி வரை குழிதோண்டி அதில் வாழும்.

விவசாயிகளுக்கு எறும்புதின்னிகள் மிகவும் உற்றத் தோழன். வயல்வெளிகளில் இருக்கும் பூச்சிகளை இவை இரையாக்குவதால், எறும்புதின்னிகள் விவசாயத்துக்கு மிகவும் நன்மை செய்யக் கூடியவை.

தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் அதிகப்படியான எறும்புதின்னிகள் உள்ளன.

கடுமையான சட்டம்: இந்தியாவில் எறும்புதின்னிகள் வனவிலங்கு தடுப்புச் சட்டம் 1972-இல் அட்டவணை 1-இல் இடம்பெற்றுள்ளது. அதன்படி எறும்புதின்னிகளைக் கொன்றாலோ, கடத்தினாலோ, அவர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்க சட்டத்தில் வழி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.