கனமழை கொட்டியும் சொட்டுத் தண்ணீர் கூட வராத திருவொற்றியூர் கோயில் திருக்குளம்

திருவொற்றியூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை இரவு கனமழை கொட்டியும் இங்குள்ள கோயில் திருக்குளத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராதது பக்தர்கள், பொதுமக்களை 

திருவொற்றியூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை இரவு கனமழை கொட்டியும் இங்குள்ள கோயில் திருக்குளத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராதது பக்தர்கள், பொதுமக்களை வருத்தமடையச் செய்துள்ளது. 
மேலும் கோயில் குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை போர்க்கால அடிப்படையில் நீக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளன.
திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயில் தமிழகத்தின் பழமையான கோயில்களில் ஒன்றாகும். திருவொற்றியூர் நகரத்தின் பெருமையே இக்கோயில்தான். மேலும் இங்கு அமைந்துள்ள தேரடி, நான்கு மாட வீதிகள், திருக்குளம், உள் பிரகார குளம், சிறப்பு பெற்ற வட குருஸ்தலம் என விசாலமாக விரிந்துள்ள இப்பகுதியின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ளது திருக்குளம். இக்குளம் நிரம்பும் வகையில் மழைநீர் கால்வாய்கள் அப்போதே சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய திருவொற்றியூர் நெடுஞ்சாலையிலிருந்து வடக்கு மாட வீதி, தேரடி வழியாக மழைநீர் குளத்திற்கு வரும் வகையில் சிறப்பு அமைப்புகள் பழங்காலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவைகள் சரியான முறையில் தூர்வாரவும், பராமரிக்கவும் இல்லை என்பதே தற்போதை பிரச்னைக்கு மூல காரணமாக உள்ளது. 
கொட்டித் தீர்த்த மழையிலும் சொட்டு நீர் கூட வராத அவலம்: சனிக்கிழமை திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் கனமழை பெய்தது. தேரடி, எல்லையம்மன் கோயில், பெரியார் நகர், எர்ணாவூர் மேம்பாலம், எண்ணூர் விரைவு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கார்கள், இருசக்கர வாகனங்கள் மிதந்து செல்லும் வகையில் கனமழை பெய்தாலும் திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் குளத்தில் ஒரு சொட்டுநீர் கூட தேங்கவில்லை. 
கால்வாய்களில் அடைப்பு: இது குறித்து வடக்கு மாடவீதியில் தேநீர் கடை வைத்திருக்கும் ராஜரத்தினம் கூறியது: 
திருவொற்றியூர் பகுதிகளில் கனமழை பெய்யும்போது வெளியேறும் மழைநீர் நேரடியாக கோயில் குளத்திற்குச் செல்லும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் மழை நீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலையில் உள்ள கால்வாய், வடக்கு மாட வீதியில் உள்ள கால்வாயை விட தாழ்வான நிலையில் உள்ளது. வடக்கு மாட வீதியில் இரண்டு இடங்களில் கழிவு நீர் குழாய்கள் தடையாக அடைத்துள்ளன. தேரடி பகுதியில் மழைநீர் வடிகால் முழுவதுமாக முற்றிலுமாக கடைகாரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன என்றார் அவர். 
முறையற்ற வகையில் தூர்வாரல் பணி: இப்பிரச்னை குறித்து திருவொற்றியூர் பாரதி பாசறையின் செயலாளர் முனைவர் மா.கி.ரமணன் கூறியது: பிரபல மருத்துவர் ஒருவர் தூர்வாரும் பணிக்காக நிதி அளிப்பதாகக் கூறியவுடன் எவ்வித திட்டமிடலுமின்றி வடக்கு புறத் துறை வழியாக சறுக்குப் பாதைகளை அமைத்து இயந்திரங்களை இறக்கி கிராமத்துக் குளங்களைப் போல ஆழப்படுத்திவிட்டனர். ஆனால் மணற்பாங்கான பகுதியாக உள்ள திருவொற்றியூர் பகுதிக்கென சிறப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். அடிப்பகுதியில் தண்ணீர் அதிகம் உறிஞ்சப்படாத வகையில் தேவையான அளவு களிமண் நிரப்பி இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில் திருக்குளமே சீரழிவின் விளிம்பில்தான் உள்ளது. ஆனால் இது குறித்துக் கவலைப்படும் நிலையில்தான் மாநகராட்சி, அறநிலையத் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இல்லை என்பதே வருத்தப்பட வேண்டிய உண்மை என்றார் ரமணன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com