ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாலையோர உணவகங்களில் தொடரும் சுகாதார சீர்கேடு: ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை

சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள சாலையோர உணவகங்கள், பேருந்து நிலையக் கடைகளில் சுகாதாரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு

News image

சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு டீ கடையில் உணவுப் பொருள்களின் தரம் குறித்து புகார் தெரிவிக்க செல்லிடப்பேசி எண்ணுடன் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர். 

Updated On :24 செப்டம்பர் 2017, 10:56 pm

சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள சாலையோர உணவகங்கள், பேருந்து நிலையக் கடைகளில் சுகாதாரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 
எச்சரிக்கையை மீறி விற்பனை செய்தால் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்பதோடு, தரமற்ற உணவுகள் குறித்து 94440 42322 என்ற செல்லிடப்பேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மட்டும் சுமார் 2,500 சாலையோரக் கடைகளிலும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 2,000 கடைகள் என 4,500-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதைத் தவிர்த்து 3,500-க்கும் மேற்பட்ட சிற்றுண்டி விற்பனை செய்யும் கடைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்து நிலையக் கடைகள் உள்ளன. 
சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்புக்குப் பிறகு சென்னையில் சாலையோர உணவகங்களில் சாப்பிடும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 
உயர்தர மற்றும் நடுத்தர உணவகங்களுடன் ஒப்பிடுகையில் சாலையோரங்களில் உள்ள தள்ளுவண்டிக் கடைகளில் இட்லி, தோசை மற்றும் பொரித்த உணவு வகைகளின் விலை மிகவும் குறைவாகும். திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வேலை நாள்களில் இந்தக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, போரூர், தரமணி என தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், இதர தொழில் நிறுவனங்கள் உள்ள இடங்கள் மற்றும் ரயில் நிலையங்களின் அருகே உள்ள சாலையோர கடைகளில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் சாப்பிட்டு வருகின்றனர். 
அடிப்படை வசதிகள் இல்லாத சாலையோரக் கடைகளில் உணவுப் பொருள்களின் தரம் குறைவாக இருக்கும் என்றாலும் தற்போதைய நிலையில் அவற்றின் தரம் மிகவும் மோசமாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வருகின்றன. 
குடல் புண், நெஞ்செரிச்சல்...: இது குறித்து சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையைச் சேர்ந்த ஐ.டி.நிறுவன ஊழியர் சிவக்குமார், போரூரைச் சேர்ந்த டி.கார்த்திகேயன் ஆகியோர் கூறியது: சாலையோரக் கடைகளில் சுத்தமான தண்ணீர் கிடையாது. பொரித்தல் மற்றும் உணவு தயாரித்தலுக்கு ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மீண்டும் பலமுறை பயன்படுத்தப்படுகிறது. 
பிளாஸ்டிக் பேப்பரில் இட்லி தயாரிப்பதோடு, பல உணவு வகைகளை அந்த காகிதத்தில் வைத்துக் கொடுக்கின்றனர். மாலை நேரத்தில் செயல்படும் தள்ளுவண்டிக் கடைகளில் பஜ்ஜி, வடை, பிரியாணி, ஃபிரûடு ரைஸ் அனைத்திலும் வண்ண, வண்ணப் பொடிகள், ரசாயனங்களைச் சேர்க்கின்றனர். இதனால் குடல்புண் உள்பட பல விதமான வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக சாக்கடைகளுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள குறைந்த விலை பிரியாணி கடைகளில் சாப்பிடும்போது அஜீரணக் கோளாறு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் உடனடியாக ஏற்படுகின்றன. சுவையாக இருக்க வேண்டும் என்பதற்காக அஜினமோட்டோ, காரம் ஆகியவற்றை அதிகளவில் சேர்ப்பதோடு வெந்தும், வேகாத நிலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். தட்டுகளைக் கூட சரியாக சுத்தம் செய்வதில்லை.
கூலித் தொழிலாளர்கள் முதல் ஐ.டி. ஊழியர்கள் வரை என சென்னையில் தினமும் லட்சக்கணக்கானோர் இதுபோன்ற கடைகளில்தான் சாப்பிடுகின்றனர். ஆனால் அவர்களது ஆரோக்கியத்துக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரக் கடைகளில் தொடர்ந்து சோதனைகள் நடத்த வேண்டும் என்றனர். 
ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்: இது குறித்து சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியது:- சாலையோரங்கள், பேருந்து நிலையங்கள் என நகரின் பல பகுதிகளில் உள்ள கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். உணவுப் பொருள்களில் தடை விதிக்கப்பட்ட வண்ணப் பொடிகள், ரசாயனங்களைச் சேர்க்கக் கூடாது; ஈக்கள் மொய்க்காதவாறு உணவுப் பண்டங்களை மூடி வைக்க வேண்டும்; சாலையோர உணவகங்களில் பணிபுரிபவர்கள் கையுறைகளை அணிய வேண்டும்; ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயைத் திரும்பவும் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகள் குறித்து அவர்களுக்கு விளக்கி வருகிறோம். எச்சரிக்கைக்குப் பிறகும் விதிமுறைகளை மீறும் கடைக்காரர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. விதிகளை மீறும் கடைக்காரர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும். 
செல்லிடப்பேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்: பொதுமக்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் ஆரோக்கியமான முறையில் உணவுப் பொருள்களைத் தயாரிக்க வேண்டும் என கடைக்காரர்களுக்கு துண்டுப் பிரசுரம் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் பொதுமக்கள் உணவுப் பொருள்களின் தரம் குறித்து 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என கடந்த சில நாள்களாக மாநகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.