திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மார்பக பரிசோதனை சிறப்பு மையம்: ஜனவரி முதல் செயல்படத் தொடங்கும்

மாநிலத்திலேயே முதன் முறையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மார்பகப் பரிசோதனைக்கென சிறப்பு மையம் ஜனவரி முதல் செயல்பட உள்ளது.

News image

கீழ்ப்பாக்கம் அரசு பொதுமருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மார்பக பரிசோதனை மையம். (இடது) அதிநவீன மருத்துவக் கருவி.

Updated On :26 டிசம்பர் 2018, 4:13 am IST

மாநிலத்திலேயே முதன் முறையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மார்பகப் பரிசோதனைக்கென சிறப்பு மையம் ஜனவரி முதல் செயல்பட உள்ளது.
அதற்கான கட்டமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டதாகவும், விரைவில் சுகாதாரத் துறை அமைச்சர் அதனைத் திறந்து வைப்பார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுமார் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அந்த மையத்தில் பெண்களின் மார்பகப் பிரச்னைகளைத் துல்லியமாகப் பரிசோதிப்பதற்கென அதிநவீன மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அக்
கருவிகளின் மதிப்பு மட்டும் ரூ.4 கோடிக்கும் அதிகம் எனத் தெரிகிறது.
அவற்றில் உள்ள சில வசதிகளும், தொழில்நுட்பமும் தனியார் மருத்துவமனைகளில் கூட இல்லை எனக் கூறப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை ஒரு லட்சம் பெண்களில் 26 பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் 34 சதவீதம் பேர் உரிய சிகிச்சை மேற்கொள்ளாமல் உயிரிழப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகளும் அதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
தமிழகத்தை எடுத்துக் கொண்டால், பல்வேறு விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதுடன் பாதிக்கப்பட்டோருக்கு இலவச சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில், மார்பகப் பரிசோதனைக்காக சிறப்பு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
அந்த வரிசையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 3.2 கோடி மதிப்பில் முப்பரிமாண மார்பக நுண்கதிர் பரிசோதனை கருவி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நிறுவப்பட்டது. தற்போது அதற்கு அடுத்தகட்டமாக மார்பகப் பரிசோதனைக்கென சிறப்பு மையத்தையும் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக பல ஆயிரம் சதுர அடியில் உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த மாதத்தில் அந்த மையத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் வசந்தாமணி கூறியதாவது:
மார்பகப் பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் புற்றுநோய் பாதிப்புகளை முழுமையாகத் தடுக்க முடியும். அதற்கான அனைத்து வசதிகளும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ளன. தற்போது அதன் தொடர்ச்சியாக, மார்பகப் பரிசோனைக்கான பிரத்யேக மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
மருத்துவமனையின் நுண்கதிர் பிரிவு தலைவர் டாக்டர் தேவி மீனாள் இதுகுறித்து கூறியதாவது:
எக்ஸ்-ரே, அல்ட்ரா சவுண்ட், எலஸ்டோகிராஃபி, எம்ஆர்ஐ என பல்வேறு வகையான பரிசோதனைகளை சிறப்பு மையத்தில் மேற்கொள்ள முடியும். அதற்காக தருவிக்கப்பட்டுள்ள நவீன மருத்துவ உபகரணங்களின் வாயிலாக மார்பகக் கட்டிகளைத் துல்லியமாகக் கண்டறிந்து, அவற்றின் திசுக்களை எடுத்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்ப முடியும். அதுமட்டுமன்றி, புற்றுநோய்க்கான அறிகுறிகளாகக் கருதப்படும் நுண்ம படிமங்களை வேரோடு அகற்றவும் இயலும்.
இந்த வகை பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் செலவாகும். அதிலும் குறிப்பிட்ட பரிசோதனைகளில் ஒரு நபருக்குப் பயன்படுத்திய மருத்துவப் பொருள்களை மற்றொருவருக்குப் பயன்படுத்த இயலாது. அதற்கு மட்டுமே தனித்தனியே ஒவ்வொருவரும் ரூ.27 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனைத்து பரிசோதனைகளும், சிகிச்சைகளும் இலவசமாகவே வழங்கப்
படுகின்றன என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.