சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறவர்கள், மதுபோதையில் வாகனம் ஓட்டினால் அவர்களது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில் புத்தாண்டையொட்டி டிசம்பர் 31ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணிக்கு குவிக்கப்படுவார்கள்.
புத்தாண்டையொட்டி, சாலை விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கு 25 சாலை பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் சென்னை முழுவதும் திங்கள்கிழமை இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பாதுகாப்புக் கருதி, முக்கியமான மேம்பாலங்கள் திங்கள்கிழமை நள்ளிரவு சில மணி நேரம் மூடப்படும்.
இது தவிர்த்து மோட்டார் சைக்கிள் பந்தயத்தைத் தடுப்பதற்காக கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ்காந்தி சாலை, சர்தார் பட்டேல் சாலை பகுதிகளில் 20 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மெரீனா, எலியட்ஸ், சாந்தோம், நீலாங்கரை கடற்கரைகளில் மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில், தற்காலிக காவல் உதவி மையங்கள் செயல்படும். மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். இதனால் சம்பந்தப்பட்ட நபர் காவல்துறையின் தடையில்லாச் சான்றிதழ், பாஸ்போர்ட் மற்றும் விசா பெறத் தேவையான சான்று பெறுவதில் இடர்பாடு ஏற்படும்.
பொதுமக்கள் யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும். பாதுகாப்புக் கருதி கூடுதலாக போலீஸார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுகிறார்கள். இதனால் சென்னை முழுவதும் சுமார் 15 ஆயிரம் போலீஸார் திங்கள்கிழமை இரவு இரு ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








