சென்னையில் 4-ஆவது மாடியில் இருந்து இளைஞர் குதிக்கும் போது விழுந்ததில் படுகாயமடைந்த சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட நவீன மூளை அறுவை சிகிச்சை மூலம் அவர் குணமடைந்துள்ளார்.
சென்னை, தண்டையார்பேட்டை, ஸ்ரீராமுலு தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் மகள் தன்யஸ்ரீ (4). இவர், தனது தாத்தா அருணகிரியுடன் சஞ்சீவிராயன் தெரு வழியாக கடந்த மாதம் 28-ஆம் தேதி சென்ற போது, 4-ஆவது மாடியில் இருந்து சிவா என்ற இளைஞர் கீழே குதித்ததில், தன்யஸ்ரீ படுகாயமடைந்தார்.
இதையடுத்து, சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த தன்யஸ்ரீயின் சிகிச்சைக்கான செலவு முழுவதையும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அரசே ஏற்றுக் கொண்டது.
நவீன மூளை அறுவை சிகிச்சை: இதுகுறித்து அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர் சுசித்ரா ரஞ்சித் கூறுகையில், " தன்யஸ்ரீயின் மூளையில் வீக்கம் அதிகரித்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, மூளை, மண்டை ஓட்டு அழுத்த கட்டுப்பாட்டு நவீன அறுவை சிகிச்சையான "பிரெயின் டீகம்ப்ரெசிவ் க்ரானியெக்டெமி' சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் அவர் உடல்நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்புக்குப் பிறகு அவர், விரைவில் வீடு திரும்புவார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.