ஸ்டான்லி மருத்துவமனையில் சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு தினம்

சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு தினத்தையோட்டி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் திங்கள்கிழமை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Updated on
1 min read

சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு தினத்தையோட்டி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் திங்கள்கிழமை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதுகுறித்து அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
இந்தியா முழுவதும் சுமார் ஒரு கோடி பேர் வரை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டும் மாதம் இந்நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர். 
இவ்வாறான நோயாளிகளை அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்துவதில் ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
சுமார் 20 ஆண்டுகளாக வலிப்பு நோயால் அவதிப்பட்ட சுமார் 35 வயதை எட்டிய பெண்மணி ஒருவருக்கு நவீன கருவிகள் மூலம் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது சுமார் 9 மாதங்களைக் கடந்துவிட்ட நிலையில் அவருக்கு மீண்டும் எவ்வித பாதிப்பும் இல்லை. இதேபோல் தினமும் நான்கு முறை வலிப்பு வந்து அவதிப்பட்ட சிறுவன் ஒருவனையும் சிறப்பு அறுவைச் சிகிச்சை மூலம் இம்மருத்துமனையில் குணப்படுத்தப்பட்டுள்ளது. 
தற்போது அறுவைச் சிகிச்சை முடிந்து நான்கு மாதங்களைக் கடந்து இச்சிறுவனுக்கு மீண்டும் இந்நோய் பாதிப்பு இல்லை. 
எனவே வலிப்பு நோய் என்பது குணப்படுத்த முடியாதது இல்லை என்பதை வலியுறுத்தவும், இந்நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு தின சிறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.பொன்னம்பல நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேரணி, வலிப்பு நோய் குறித்த கேள்வி பதில், சிறப்பு சொற்பொழிவு உள்ளிட்டவை நடைபெற்றன. மேலும் வலிப்பு நோயால் பாதிக்கபட்டவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் தனசேகரன், நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் எம்.ரமேஷ், குழந்தைகள் நரம்பியல் துறை பேராசிரியர் டாக்டர் எஸ். வேலுச்சாமி, நரம்பியல் துறை பேராசிரியர் சு.அருணன், குழந்தைகள் நலத்துறை இயக்குநர் டாக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com