சென்னை மயிலாப்பூரில் ஓட்டுநர் தாக்கப்பட்டதை கண்டித்து, அரசுப் பேருந்துகளை நிறுத்தி வியாழக்கிழமை இரவு போராட்டம் நடைபெற்றது.
சென்னை பாரிமுனையில் இருந்து மந்தைவெளி நோக்கி ஒரு அரசுப் பேருந்து வியாழக்கிழமை புறப்பட்டு வந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் அர்ஜூனன் ஓட்டினார். மயிலாப்பூர் லஸ் சந்திப்பு அருகே செல்லும்போது, பேருந்தில் இருந்த ஒரு பயணி, வெளியே எச்சிலை உமிழ்ந்தார். இது அங்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மீது பட்டதாம். உடனே அவர்கள், பேருந்தை வழிமறித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தகராறு முற்றவே அவர்கள், ஓட்டுநர் அர்ஜூனனை தாக்கிவிட்டு தப்பியோடினர். இது குறித்து தகவலறிந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், மயிலாப்பூர் லஸ் பகுதியில் வந்த அனைத்து பேருந்துகளையும் ஆங்காங்கு நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசுப் பேருந்துகளில் வந்த பயணிகள், சாலையில் இறங்கி நடந்துச் சென்றனர். தகவலறிந்த போலீஸார், அரசுப் பேருந்து ஓட்டுநர்களிடம் சமாதானம் பேசினர். அதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஓட்டுநர் அர்ஜூனன் தாக்கப்பட்டது தொடர்பாக மயிலாப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து, இருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல திருவல்லிக்கேணியில் 27 பி வழித்தட அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டது குறித்தும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.