

சென்னையில் திருமங்கலம், விமான நிலையம் ஆகிய இரு மெட்ரோ ரயில் நிலையங்களில் வாடகை இரு சக்கர வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-நேரு பூங்கா வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரயில் பயணிகள் சேவை நடைபெறுகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களுக்குப் பயணிகள் எளிதில் வந்து செல்ல இலவச சைக்கிள் திட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இந்தச் சேவைக்காக தற்போது 200 சைக்கிள்கள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர, வாடகை இருசக்கர வாகன சேவை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ரூ.2000 முன்பணம்: இந்நிலையில், திருமங்கலம், விமானநிலையம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் வாடகை இருசக்கர வாகன சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 10 இருசக்கர வாகனங்களும், விமானநிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் 8 இருசக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
மெட்ரோ ரயிலில் வரும் பயணிகள் தங்களின் நண்பர்களை சந்தித்தல், ஷாப்பிங் செல்வது உள்பட பல்வேறு தேவைக்கு இந்த வாகனத்தில் சென்று பூர்த்தி செய்து கொள்ள முடியும். இதன்மூலம் பயணிகளின் நேரம் சேமிக்கப்படும். இந்த சேவையை பெற அசல் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம், அரசின் அடையாள உரிமம் ஆகியவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த சேவை பெற ரூ.2,000 முன்பணம் செலுத்த வேண்டும். குறைந்த பட்ச கட்டணம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.75 ஆகும்.
விரைவில் சேவை நீட்டிப்பு: இதுகுறித்து மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறியது: மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் இறங்கியவுடன் தேவையான இடங்களுக்கு எளிதாக செல்லும் விதமாக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக திருமங்கலம் மற்றும் விமான நிலைய மெட்ரோ நிலையங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் இந்த சேவை விரைவில் தொடங்கப்படும் என்றனர்.
வாடகை இரு சக்கர வாகன சேவைக்காக எஸ்.எஃப்.ஏ. என்ற இருசக்கர வாகனத்தை வாடகைக்கு இயக்கும் நிறுவனத்துடன் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனத்தில் 60 மாடல்களை கொண்ட 200 இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. இந்த வாகனங்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். வாடகை இருசக்கர வாகனத்தை பெற்று, அதை அந்த மெட்ரோ ரயில் நிலையம் அல்லது மற்றொரு மெட்ரோ ரயில் நிலையத்தில் அளித்துவிடலாம் அல்லது இந்த நிறுவன அலுவலகத்தில் நேரிடையாக சென்று அளிக்கலாம். பயணியால் வரமுடியவில்லை எனில், அந்த நிறுவனத்தின் ஊழியர் குறிப்பிட்ட இடத்துக்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.