மோட்டல்களால் சோதனைக்குள்ளாகும் தொலை தூரப் பயணிகள்

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தொலைதூர பேருந்துகள் நெடுஞ்சாலையோரங்களில், அடிப்படை வசதியற்று அமைந்துள்ள குறிப்பிட்ட சில மோட்டல்களில் உணவுக்காக நிறுத்தப்படுவதால்
மோட்டல்களால் சோதனைக்குள்ளாகும் தொலை தூரப் பயணிகள்
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தொலைதூர பேருந்துகள் நெடுஞ்சாலையோரங்களில், அடிப்படை வசதியற்று அமைந்துள்ள குறிப்பிட்ட சில மோட்டல்களில் உணவுக்காக நிறுத்தப்படுவதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த அவலத்தை களைவதற்கு அரசு நிர்வாகம் நேரடியாக தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்பது தொலைதூர பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
நெடுஞ்சாலைகளில் உள்ள சாலையோர உணவகங்கள், "மோட்டல்கள்' என அழைக்கப்படுகின்றன. இந்த மோட்டல்களில் குடிநீர் முதல் கழிப்பிடம் வரை கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
இத்தகைய மோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளின் விலை நகர்புறங்களில் உள்ள ஓட்டல்களில் நிர்ணயிக்கப்படும் விலையைக் காட்டிலும் அதிகமாக இருப்பது வாடிக்கை. அத்துடன், விலை அச்சிடப்பட்ட தின்பண்டங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இத்தகைய மோட்டல்கள் பெரும்பாலும் சுகாதாரமற்ற, பராமரிப்பு சூழலற்ற இடங்களில் அமைந்துள்ளன என்று பயணிகள் குறை கூறுகின்றனர்.
பயணிகள் நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டிய சூழலில், இத்தகைய மோட்டல்களில் இயற்கை உபாதைக்காக இறங்க வேண்டிய நிலை உள்ளது. நீண்ட தொலைவுப் பயணங்களில் இரவு அல்லது பகல் உணவை மோட்டல் உணவகங்களில் சாப்பிட வேண்டிய கட்டாய நிலையும் உள்ளது. பெரும்பாலான இடங்களில் உள்ள கட்டணக் கழிப்பிடங்களில் சுகாதாரம் பேணப்படுவதில்லை. சில இடங்களில் சிறுநீர் கழிக்க மட்டுமே வசதி உள்ள சூழலில் வயதான பயணிகள் பலரும் அவதிக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது. மேலும் சில இடங்களில் கழிப்பிட வசதி முற்றிலும் இல்லாத நிலையில், திறந்தவெளியைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் பயணிகள் விபத்தைச் சந்திக்கும் நிலையும் ஏற்படுகிறது.
இந்தச் சூழல் நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில், பயணிகளின் நலன் கருதி, அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் குறிப்பிட்ட இடங்களில் மோட்டல்கள் அமைக்கப்பட்டன. முறையான நிர்வாகம் மற்றும் பராமரிப்பு இல்லாமல் போனதால், பெரும்பாலான மோட்டல்கள் மூடப்பட்டன. தற்போது இவை அனைத்தும் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தொலைதூர பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் செல்லும் வழித்தடங்களில், தனியார் பலரும் மோட்டல்களை திறந்தனர். இந்த மோட்டல்களுக்கு அரசியல் ஆசீர்வாதம் உண்டு.
பேருந்து ஒன்றுக்கு ரூ.50 }ஐ மோட்டல்கள் தரும் வகையில், போக்குவரத்து துறை ஒப்பந்தம் செய்து நடைமுறையில் உள்ளது. அத்துடன் பேருந்து எந்த மோட்டலில் நிறுத்த வேண்டும் என்பது உள்பட, பேருந்து புறப்படும்போதே நடத்துநர்கள் அறிவுறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய உணவகங்களில் பேருந்துகள் கட்டாயமாக நிறுத்தப்படும் நிலையில், அங்கு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களின் விலை அதிகமாக இருப்பதோடு, சுகாதாரமற்ற நிலையும் காணப்படுவது அதிகரித்துள்ளது.
இரவு நேரங்களில் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அயர்ந்து தூங்கும் நிலையில்,
பேருந்துகளின் பக்கவாட்டு பகுதிகளைத் தட்டி ஒலியெழுப்பி, அதிகார தொனியில் பயணிகளை கீழே இறங்கச் சொல்வதும் வாடிக்கை என்று பயணிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், நடத்துனர்கள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: "இதுபோன்ற மோட்டல்களில் ஏன் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன என்ற கேள்வியை பயணிகள் எங்களிடம் கேட்கின்றனர். எங்களுக்கு இத்தகைய அடிப்படை வசதியற்ற உணவகங்களில் நிறுத்தவதற்கு விருப்பமில்லை. ஆனால் அதிகாரிகள் சொல்வதைத்தான் நாங்கள் செய்ய வேண்டியுள்ளது. மீறினால் விளக்கக் கடிதம் தர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அத்துடன், எந்த மோட்டலில் நிறுத்தவில்லையோ, அதே மோட்டலுக்குச் சென்று ரசீதில் சீல் வைத்து வாங்கி வந்தால்தான், பயணக் கட்டண வசூலை பெற முடியும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது.
நேரமின்மை உள்ளிட்ட ஏதேனும் காரணங்களால் குறிப்பிட்ட மோட்டலில் பேருந்தை நிறுத்தத் தவறினால், மோட்டல் நடத்துவோர் எங்கள் மீது புகார் தெரிவிக்கும் நிலையும் உள்ளது. இதனால் நாங்கள் அந்த மோட்டலில் உணவு சாப்பிடாவிட்டாலும், கட்டாயம் நிறுத்திச் செல்ல வேண்டிய இக்கட்டான சூழல் உள்ளது' என்றனர்.
இதுதொடர்பாக தொமுச பொருளாளர் கி. நடராஜன் கூறியது: நாள்தோறும் சராசரியாக 16 ஆயிரம் பேருந்துகள் மோட்டல்களில் நின்று செல்கின்றன. ஒப்பந்த அடிப்படையில் இந்த மோட்டல்கள் தேர்வு செய்யப்படுகின்றன. ஒரு பேருந்துக்கு ரூ. 75 வீதம் போக்குவரத்துக் கழகங்களுக்கு மோட்டல் உரிமையாளர் தரவேண்டும். போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான இடங்கள் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ளன.
ஹோட்டல்கள் சட்டத்தின்படி கழிவறை, குடிநீர் போன்றவற்றை பயணிகளுக்கு இலவசமாகத் தரவேண்டும் என்பது விதி. ஆனால் சிறுநீர் கழிக்க ரூ.5 வசூல் செய்யப்படுகிறது. எனினும் அக்கழிவறைகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதில்லை. இதனால் பயணிகளுக்கு தொற்றுநோய் ஏற்படுகிறது. மேலும் இதில் உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பதால், கேள்வி கேட்கும் பயணிகளை அச்சுறுத்தும் நிகழ்வும் நடைபெறுகிறது என்றார்.
சிஐடியு பொதுச் செயலர் ஆறுமுக நயினார் கூறியது: இத்தகைய உணவகங்களில் தரமற்ற எண்ணெய்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. உணவுப் பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு திடீர் சோதனை செய்ய அதிகாரம் இருந்தும் அவர்கள் அப்பகுதிகளுக்கு செல்வதே இல்லை. மேலும் மோட்டல்களில் வழங்கப்படும் குடிநீரும் சுத்திகரிக்கப்பட்டதாக இருக்காது. 
தண்ணீர் உள்பட அனைத்தையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் காரணமாக பயணிகள் பெரும்பாலோர் இத்தகைய உணவகங்களில் சாப்பிடுவதற்காக இறங்குவது குறைந்து வருகிறது. எனவே அரசு தலையிட்டு நியாயமான முறையில், தரமான உணவுப் பொருள்களை இத்தகைய உணவகங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஆறுமுக நயினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com