மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ டில்லி பாபு தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மூவருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் டில்லி பாபு அளித்த மனு விவரம்:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்துக்கு உள்பட்ட கரியமங்கலம் பகுதியில் உள்ள உணவகத்தில் கடந்த ஜூன் மாதம் 26 -ஆம் தேதி எனது கட்சி நிர்வாகிகளுடன் உணவருந்திக் கொண்டிருந்தேன். அப்போது, அங்கு வந்த செங்கம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி, காவல் உதவி ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், முத்துகுமாரசாமி ஆகியோர் என்னை புதுப்பாளையம் காவல் நிலையத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். பின்னர், அங்கு சேலம் -சென்னை 8 வழிச் சாலைக்கு எதிராகப் போராடியதாக கூறி, என்னை தாக்கியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டி சித்ரவதை செய்தனர். மேலும், என் மீது பொய் வழக்கும் பதிவு செய்தனர். மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நோட்டீஸ்: இந்த விவகாரம் தொடர்பாக செங்கம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி, உதவி ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், முத்துகுமாரசாமி ஆகியோர், டிசம்பர் மாதம் 12 -ஆம் தேதி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஆணையத்தின் நீதிபதி டி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








