காமராஜர் துறைமுகத்தின் பங்குகளை முழுமையாக விற்க மத்திய அரசு தீவிரம்: கேள்விக்குறியாகும் முன்மாதிரி துறைமுகத்தின் எதிர்காலம்

நாட்டின் "முன்மாதிரி துறைமுகம்' என்றழைக்கப்பட்டு வரும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் மீதான தனது பங்குகள் அனைத்தையும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்த  நிலையில் தற்போது இதற்கான
காமராஜர் துறைமுகத்தின் பங்குகளை முழுமையாக விற்க மத்திய அரசு தீவிரம்: கேள்விக்குறியாகும் முன்மாதிரி துறைமுகத்தின் எதிர்காலம்
Updated on
3 min read

நாட்டின் "முன்மாதிரி துறைமுகம்' என்றழைக்கப்பட்டு வரும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் மீதான தனது பங்குகள் அனைத்தையும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்த  நிலையில் தற்போது இதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது.
இத்திட்டம் நிறைவேறினால் காமராஜர் துறைமுகத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  
தமிழக மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி தட்டுப்பாடின்றி தொடர்ந்து இறக்குமதி செய்யும் வகையில் சென்னைக்கு அருகே எண்ணூரில் துறைமுகம் கடந்த 2001-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஏற்கெனவே உள்ள பெருந்துறைமுகங்கள் அனைத்தும் அறக்கட்டளை சட்டத்தின்படி செயல்பட்டு வந்த நிலையில் எண்ணூர் துறைமுகம் மட்டுமே நிறுவனங்கள் சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.  
இத்துறைமுகத்தின் 67 சதவீத பங்குகளை மத்திய அரசும், 33 சதவீத பங்குகளை சென்னை துறைமுகமும் வைத்துள்ளன. இத்துறைமுகம் அமைப்பதற்காக சுமார் 1300 ஏக்கர் நிலம் தமிழக அரசால் சொற்ப விலையில் வழங்கப்பட்டுள்ளது.  துறைமுகத்திற்கு வெளியே கட்டமைப்பு வசதிகளுக்காக மத்திய அரசின் உப்பு வாரியத்திற்குச் சொந்தமான சுமார் 800 ஏக்கர் நிலமும் துறைமுகத்திடம் குறைந்த விலையில் அளிக்கப்பட்டுள்ளது.  துறைமுகத்தின் தற்போதைய மொத்த நிலம் சுமார் 2,700 ஏக்கராக உள்ளது.  ஆண்டுக்கு சுமார் 30 மில்லியன் சரக்குகளைக் கையாளும் வகையில் தொடங்கப்பட்ட இந்த துறைமுகம் தற்போது 65 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது.  
அடுத்த ஐந்தாண்டுகளில் சுமார் 145 மில்லியன் டன்  சரக்குகளைக் கையாளும் வகையில் கட்டமைப்புத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக ஜி.கே.வாசன் இருந்தபோது எண்ணூர் துறைமுகத்தின் பெயர் காமராஜர் துறைமுகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 நாட்டின் முன்மாதிரி துறைமுகம்:   இத்துறைமுகத்தில் தற்போது தமிழக மின் வாரியத்திற்கான நிலக்கரியை கையாளும் முனையங்கள்-4, எரிவாயு, செட்டிநாடு நிறுவனத்தின் பல்சரக்கு, நிலக்கரி முனையம், சிகால் நிறுவனத்தின் இரும்புத்தாது முனையம், ஐ.ஓ.சி. நிறுவனத்தின் இயற்கை எரிவாயு, ஐ.எம்.சி. நிறுவனத்தின் கடல்சார் திரவ முனையம்,  வாகனங்கள் கையாளும் முனையம் என 11 கப்பல் தளங்கள் செயல்பட்டு வருகின்றன.   சுமார் ரூ.300 கோடி நேரடி முதலீட்டில் தொடங்கப்பட்ட துறைமுகத்தின் தற்போதைய தோராய மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடி (நிலங்கள், முதலீடு, திறன் மதிப்பு உள்ளிட்டவை உள்பட) என கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் மத்திய அரசுக்கு லாபப் பங்கு ஈவுத் தொகையாக ( ஈண்ஸ்ண்க்ங்ய்க்) மட்டும் சுமார் ரூ.400 கோடியை துறைமுகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.  இதுதவிர சுமார் ரூ.800 கோடிவரை அனைத்து வகை வரிகள், கட்டணங்களாக மத்திய அரசுக்கு இத்துறைமுகம் செலுத்தியுள்ளது.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 12 மில்லியன் டன் சரக்குகள் கையாண்ட நிலையில் கடந்த ஆண்டு 34 மில்லியன் சரக்குகளைக் கையாண்டதன் மூலம் சுமார் ரூ.710 கோடி வருவாய் ஈட்டி இத்துறைமுகம் சாதனை படைத்துள்ளது.  இதே வளர்ச்சி தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் ஆண்டுக்கு 145 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறனை காமராஜர் துறைமுகம் எட்டும் எனக் கூறப்படுகிறது.  இதனால்தான் இத்துறைமுகம் நாட்டின் ஏற்கெனவே உள்ள, இனி தொடங்க உள்ள அனைத்து துறைமுகங்களுக்கும் முன்மாதிரி துறைமுகமாக இருக்கும் என கப்பல்துறை அமைச்சகமே வெளிப்படையாக அறிவித்துள்ளது.  
மொத்த பங்குகளையும் விற்க முடிவு:  காமராஜர் துறைமுகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த நிலையில் மத்திய அரசு வைத்துள்ள மொத்தப் பங்குத் தொகையையும் விற்பது என கடந்த பிப். 28-ல் பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.  மேலும் இப்பங்குகளை அருகில் உள்ள சென்னைத் துறைமுகத்திற்கு விற்பதன் மூலம் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசின் கஜானாவிற்கு திருப்பும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே 33 சதவீத பங்குகளை தன்னகத்தே வைத்துள்ள சென்னைத் துறைமுகம் தற்போது  மத்திய அரசின் 67 சதவீத பங்குகளையும் வாங்குவதன் மூலம் காமராஜர் துறைமுகத்தின் முழு உரிமையாளராக சென்னை துறைமுகம் மாற உள்ளது.  இதற்கான கணக்கெடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.   மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் தற்போதைய நிலையிலும் பங்கு விற்பனைக்கான சட்ட ஆலோசகர், சொத்து பரிமாற்ற ஆலோசகரை நியமனம் செய்ய வரும் மே 14 வரை விண்ணப்பம் பெற விளம்பர அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  இதே வேகத்தில் சென்றால் இன்னும் நான்கைந்து மாதங்களில் காமராஜர் துறைமுகம் சென்னைத் துறைமுகத்தின் கீழ் அடைக்கலம் ஆவதை யாரும் தடுக்க முடியாது என்ற நிலையே தற்போது உள்ளது. இதற்கு காமராஜர் துறைமுகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து முனையங்களின் நிர்வாகமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  மேலும் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.  ஆனாலும் மத்திய அரசின் முடிவில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. 
பொன் முட்டையிடும் வாத்து:   இது குறித்து இத்துறைமுகத்தின் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற எஸ்.வேலுமணி கூறியது:
நாட்டிலேயே மிகக் குறைந்த அளவில் சுமார் 100 ஊழியர்களை மட்டும் கொண்டு தனியார் முதலீட்டின் மூலம் தொடர்ந்து லாபம் ஈட்டி மினி ரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமாக உள்ள காமராஜர் துறைமுகத்தின் பங்குகளை என்ன காரணத்திற்காக விற்க மத்திய அரசு அவசரம் காட்டுகிறது என்பது புரியவில்லை.  
முதலீடு செய்த தொகையை விட இருமடங்குக்கும் மேலாக ஈவுத் தொகை மத்திய அரசு மற்றும் சென்னைத் துறைமுகத்திற்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டுவிட்டது.   இன்னும் சில ஆண்டுகளில் பல மடங்கு வருவாய் ஈட்டும் வாய்ப்புள்ள ஒரே துறைமுகம் இது மட்டுமாகவே இருக்கும்.  சென்னைத் துறைமுகத்தின் நிர்வாக நடைமுறை வேறு, காமராஜர் துறைமுகத்தின் நிர்வாக நடைமுறை வேறு.  இரண்டும் ஒற்றை நிர்வாகத்தில் வரும்போது காமராஜர் துறைமுகத்தின் வளர்ச்சி நிச்சயம் பாதிக்கப்படும். இதன் மூலம் காமராஜர் துறைமுகத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்பதே உண்மை. எனவே பொன் முட்டையிடும் வாத்து போன்ற காமராஜர் துறைமுகத்தின் பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார் வேலுமணி. 
பங்குகளை விற்க விடமாட்டோம்: கப்பல் போக்குவரத்து  துறை முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியதாவது: 
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டுதான் எண்ணூர் துறைமுகம் அமைக்கப்பட்டது.  தமிழக அரசு வழங்கிய நிலம், ஒத்துழைப்பு மூலம்தான் இவ்வளவு பெரிய துறைமுகமாக வளர்ந்துள்ளது. நாட்டிலேயே சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஒரு துறைமுகத்தின் பங்குகளை விற்க வேண்டிய அவசியம் இல்லை.  இப்பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி மத்திய அரசின் கஜானாவிற்கு நேரடியாகவே  சென்றுவிடும் எனில், தமிழகத்திற்கு பாதிப்பு இல்லையா?. இதை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசும் எதிர்த்து போராட வேண்டும்.   பெருந்தலைவர் காமராஜரின் பெயரைத் தாங்கி நிற்கும் இத்துறைமுகத்தின் எதிர்காலத்தை சீரழிக்கும்,  பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம். எக்காரணத்திற்காகவும் பங்குகளை விற்க அனுமதிக்க மாட்டோம் என்றார் டி.ஆர்.பாலு. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com