நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தெற்கு ரயில்வேயில் 136.94 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: ரயில்வே மேம்பாட்டுப் பணிகளுக்கு சிக்கல்

தெற்கு ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் வீடுகள், கடைகள் கட்டியது உள்பட பல்வேறு காரணங்களுக்காக 136.94 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2019, 11:13 pm

மு. வேல்சங்கர்


தெற்கு ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் வீடுகள், கடைகள் கட்டியது உள்பட பல்வேறு காரணங்களுக்காக 136.94 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, சென்னை கோட்டத்தில் 73.58 ஏக்கர்  நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பால், ரயில்கள் இயக்கத்தின் பாதுகாப்பில் அபாயம்  மற்றும் சிரமம் ஏற்படும் நிலை காணப்படுகிறது. மேலும், ரயில்வே மேம்பாட்டுப் பணிகளை நிறைவேற்றுவதற்கு பெரும் இடையூறாக உள்ளது.
1,313 ரயில்கள் ஓடுகின்றன: இந்திய ரயில்வேயில் முக்கிய மண்டலங்களில் ஒன்றாக தெற்கு ரயில்வே மண்டலம்  விளங்குகிறது. தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் முழுமையாகவும், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியையும் ரயில்கள் இயக்கத்தை உள்ளடக்கியுள்ளது தெற்கு ரயில்வே. சென்னை, திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், சேலம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்களை கொண்டுள்ள தெற்கு ரயில்வேயில் தினசரி சுமார் 1,313 ரயில்கள் ஓடுகின்றன. ஆண்டுக்கு 50 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கின்றனர். 
5,081 கி.மீ. ரயில் பாதை: தெற்கு ரயில்வேயில் ரயில் பாதையைப் பொருத்தவரை, தமிழகத்தில் 3,850 கி.மீ. ரயில் பாதை, கேரளத்தில் 1,045 கி.மீ. ரயில் பாதை, ஆந்திரத்தில் 121 கி.மீ. ரயில் பாதை, கர்நாடகத்தில் 43 கி.மீ. ரயில் பாதை, புதுச்சேரியில் 22 கி.மீ. ரயில் பாதை என மொத்தம் 5, 081 கி.மீ. ரயில் பாதையைக் கொண்டுள்ளது. அந்தப் பாதையை ஒட்டி நான்கு புறமும் ரயில்வேக்குச் சொந்தமாக இடம் உள்ளது. இந்த இடங்களில் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுக்கும் நடவடிக்கையில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே ஆக்கிரமிப்பு இடங்களை ரயில்வே பொறியாளர்கள் அடையாளம் கண்டு, ரயில்வே பாதுகாப்புப் படையினரின் துணையுடன் அகற்றி வருகின்றனர்.
 136.94 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் சொந்தமான இடத்தில் பல்வேறு காரணங்களுக்காக 136.94 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, சென்னை கோட்டத்தில் 73.58 ஏக்கர்  நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. கடந்த 24-ஆம் தேதி அன்று மக்களவையில் ரயில்வே அமைச்சரின் அளித்த பதிலுரையில், தெற்கு ரயில்வேயில் மொத்தம் 136.94 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 
நிகழாண்டில் மார்ச் மாத  நிலவரப்படி, தெற்கு ரயில்வேக்கு சொந்தமாக 66,433.50 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 136.94 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. சென்னை கோட்டத்தில் 73.58 ஏக்கரும், மதுரை கோட்டத்தில் 28.09 ஏக்கரும், சேலம் கோட்டத்தில் 15.14 ஏக்கரும், பாலக்காடு  கோட்டத்தில் 0.27 ஏக்கரும், திருவனந்தபுரம் கோட்டத்தில் 7.56 ஏக்கரும், திருச்சி கோட்டத்தில் 12.30 ஏக்கரும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
இப்படி ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால், ரயில் இயக்கத்தில் பாதுகாப்புக்கு ஆபத்து மற்றும் இடையூறும்,  தண்டவாளப் பராமரிப்பில் சிரமமும் ஏற்படுகின்றன. மேலும், ரயில்வே வருவாயும் பாதிக்கிறது. இதுமட்டுமின்றி, ரயில்வே மேம்பாட்டு பணிகளை செயல்படுத்துவதில் சிக்கல்களும் ஏற்படுகின்றன. 
ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை: இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: நீதிமன்றங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் மீது பொது இடம் (சட்ட விரோத ஆக்கிரமிப்பு வெளியேற்றுதல்) சட்டம் 1971-இன்கீழ் வழக்கு தொடுத்து படிப்படியாக மீட்கப்பட்டு வருகிறது. நாடோடி வியாபாரிகளின் கூடாரங்கள், விழா பந்தல்கள் போன்ற தற்காலிக ஆக்கிரமிப்புகளை ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவ்வப்போது எச்சரித்து அப்புறப்படுத்தி விடுவார்கள். தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றனர்.
தடையில்லாச் சான்று வேண்டும்: இதுகுறித்து தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்க துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் கூறியது: ரயில்வே இடங்களை ஆக்கிரமிப்பது மட்டும் சட்ட சிக்கல் அல்ல. ரயில்வே எல்லையை ஒட்டிய சொந்த இடங்களில் கட்டங்கள் கட்டுவது, புதுப்பிப்பதுகூட சட்ட சிக்கல்தான். 
இது பலருக்கு தெரியாது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, ரயில் பாதைகளை ஒட்டிய இடங்களை மிகக் குறைவாக வாங்கி, அதிக விலைக்கு ரியல் எஸ்டேட் அதிபர்கள் பிளாட் போட்டு விற்று விடுகிறார்கள். வாங்கும் நடுத்தர மற்றம் ஏழை மக்கள் வீடு கட்டுவதற்கு வங்கிகளில் கடன் வாங்கும் போதுதான் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். 
இந்த இடங்களில் கட்டடங்கள் கட்டுவதற்கு பஞ்சாயத்து, நகராட்சி போன்ற சிவில் நிர்வாகங்களின் அனுமதி மட்டும் போதுமானது அல்ல. ரயில்வே எல்லையில் இருந்து 30 மீட்டர் தூரத்துக்குள் கட்டடங்கள் கட்ட ரயில்வே துறையிடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும். ரயில்வே விரிவாக்க தேவைகளை ஆய்வு செய்த பின்பு, முறையாக அனுமதி தருகிறது. 
ஒரு சில ரியல் எஸ்டேட் அதிபர்கள் இந்தச் சான்றிதழ் பெற ரயில்வேயிடம் அணுகுவதும் உண்டு. சான்று கிடைத்தால், அதை விளம்பரப்படுத்தி விற்பனை செய்வார்கள். ரயில்வே எல்லையையொட்டி இடம் வாங்கும் முன்பு இது தொடர்பான விவரங்களை விசாரித்து வாங்க வேண்டும் என்றார் அவர்.
தெற்கு ரயில்வேதான் அதிகம்
  தடையில்லா சான்று கோரி இந்திய ரயில்வேயிடம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 665 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  இவர்களில் தெற்கு ரயில்வேயில் இருந்து அதிக நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 336 பேர் விண்ணப்பித்துள்ளனர். தெற்கு ரயில்வேயில் தமிழகத்தில் இருந்து சுமார் 300 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, மத்திய ரயில்வேயில் 172 விண்ணப்பங்கள் வந்தன. வடகிழக்கு, வடமேற்கு, மத்திய கிழக்கு எல்லையோர ரயில்வேகளில் விண்ணப்பங்கள் வருவது இல்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.