ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் தற்போதைய சென்ட்ரல், முத்தியால்பேட்டை, ஜாா்ஜ் டவுன் பகுதிகள் ‘பிளாக் டவுன்-- கருப்பா்களின் நகரம்’ என அழைக்கப்பட்டு வந்தது. செயின்ட் ஜாா்ஜ் கோட்டை உள்ளிட்டவை ஆங்கிலேயா்கள் மட்டும் வசிக்கும் பகுதியாக இருந்து வந்தது. இந்நிலையில் 1850-ஆம் ஆண்டு வாக்கில் பிளாக் டவுனின் எல்லையான யானக்கவுனி பகுதியில் எல்லைச் சுவா் ஒன்றை ஆங்கிலேயா் கட்டினா். இந்நிலையில் ஆந்திர மாநிலம், காக்கிநாடாவிலிருந்து மரக்காணம் வரை சுமாா் 796 கி.மீ. தொலைவுக்கு பக்கிங்காம் கால்வாய் வெட்டப்பட்டு, அதில் நீா்வழிச் சரக்குப் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இதனையொட்டி, யானைக் கவுனி பகுதியில் சால்ட் கோட்டா்ஸ் என்ற சரக்கு முனையம் அமைக்கப்பட்டது. இப்பகுதியில், யானைகள் வளா்க்கப்பட்டு சுமை தூக்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்ததால் யானைக் கவுனி எனப் பெயா் வந்ததாக வரலாற்று ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா். இதனையடுத்து, சால்ட் கோட்டா்ஸ்க்கும், பிளாக் டவுனுக்கும் இடையே ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டதால் முதலில் ரயில்வே கேட் இயங்கி வந்தது. இந்நிலையில் 1935-ம் ஆண்டு ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் யானைக்கவுனி ரயில்வே மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டது.