திருவொற்றியூரில் ரூ.242 கோடியில் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம்: 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும்

சென்னை திருவொற்றியூரில் ரூ. 242 கோடி மதிப்பீட்டில் அதி நவீன ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இத்திட்டம் குறித்து பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம்
சென்னை திருவொற்றியூரில் அமைய உள்ள சூரை மீன்பிடி துறைமுக இடத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி.
சென்னை திருவொற்றியூரில் அமைய உள்ள சூரை மீன்பிடி துறைமுக இடத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி.


சென்னை திருவொற்றியூரில் ரூ. 242 கோடி மதிப்பீட்டில் அதி நவீன ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இத்திட்டம் குறித்து பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் வியாழக்கிழமை திருவொற்றியூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் மீன்பிடித் துறைமுகம் அமைக்க ஆதரவு தெரிவித்தனர். 
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நிலவி வரும் நெரிசலைக் குறைக்கும் வகையிலும், சூரை மீன், இறால் உள்ளிட்ட ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தவும் புதிய மீன்பிடித் துறைமுகத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. 
புதிய துறைமுகம்: இதைத் தொடர்ந்து, திருவொற்றியூரில் ரூ. 242 கோடி மதிப்பீட்டில் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 2018 ஜூன் 6 -ஆம் தேதி சட்டப் பேரவையில்  அறிவித்தார். இதையடுத்து திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் இங்கு புதிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. பின்னர் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு இறுதியாக  தனியார் நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டது.  
 இந்நிலையில், புதிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பது குறித்த பொதுமக்கள் கருத்து கேட்கும் கூட்டம்  வியாழக்கிழமை திருவொற்றியூரில் சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி தலைமையில்  நடைபெற்றது.  இதில் திருவொற்றியூர் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன், கடலோரக் கிராமங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், மீனவர்கள், பொதுமக்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்,  மீனவர் நல அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். இதில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 
380 மீன்பிடி விசைப்படகுகள், கப்பல்களை நிறுத்தும் வசதி: இது குறித்து மீன்வளத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியது:  கடல் பகுதியில் சுமார் 75 ஏக்கர் பரப்பளவிலும்,  நிலப்பகுதியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவிலும் இத்துறைமுகம் அமைய உள்ளது. ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவுகளையொட்டி வடபுறம் 852 மீட்டர் நீளமும், தென்புறம் 1088 மீட்டர் நீளமும் கொண்ட அலைத் தடுப்புச் சுவர்கள்  அமைக்கப்பட உள்ளன. சுமார்  300 மீட்டர் நீளத்திற்கு படகுத்துறை அமைக்கப்பட உள்ளது. மேலும்  மீன் ஏலக் கூடம்,  மீனவர்களுக்கான வலை உலர்த்தும் பின்னும் கூடம், குடிநீர், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம், பெட்ரோல் பங்க் என ஒரு துறைமுகத்திற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்படும். 
கடந்த ஜூன் மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் 24 மாத கால இடைவெளியில் மே 2021-இல் பணிகள் நிறைவடையும். இத்துறைமுகம் செயல்பாட்டிற்கு வரும்போது சுமார் 350 விசைப்படகுகளும் மீன்பிடிக் கப்பல்களும் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியும் என்றார் அவர். 
சூரை மீன்பிடித் தொழில் வளர்ச்சியடையும்: தென்னிந்திய மீனவர் நலச் சங்கத் தலைவர் கு.பாரதி கூறியது:  அதிநவீன மீன்பிடிக் கப்பல்கள் மூலம் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு மாற வேண்டிய சூழல் இருந்து வருவதால் திருவொற்றியூர் புதிய மீன்பிடித் துறைமுகம் இப்பகுதி மீனவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றார்.  
திருவொற்றியூர் தொகுதி சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கே.குப்பன் கூறியது: இத்திட்டத்தில் உள்ளூர் மீனவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தற்போது வாடகைக்கு விடப்பட்டுள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை மீண்டும் பெற்று கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com