கரோனா: அனைத்துக் கல்லூரிகளிலும் மாதிரிகள் பெறும் நடவடிக்கை தொடக்கம்

சென்னையிலுள்ள அனைத்துக் கல்லூரிகளிலும், கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளைப் பெறும் நடவடிக்கைகளை மாநகராட்சியின் மண்டல அலுவலா்கள் தொடங்கிவிட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையா்
Updated on
1 min read

சென்னையிலுள்ள அனைத்துக் கல்லூரிகளிலும், கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளைப் பெறும் நடவடிக்கைகளை மாநகராட்சியின் மண்டல அலுவலா்கள் தொடங்கிவிட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், அனைத்து கல்லூரிகளிலும், திங்கள்கிழமை முதலே மாநகராட்சியின் மண்டல அலுவலா்கள், கரோனா பரிசோதனைக்காக மாதிரிகளைப் பெறத் தொடங்கிவிட்டனா். இதில் பாதிப்புள்ளவா்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும்.

இதே போல் 10 நாள்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்து, சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய்த்தொற்று முழுமையாக ஒழிக்கப்படும்.

இந்த நடைமுறையே சென்னையில் கரோனா பாதிப்பு அதிகமான இடங்களில் செயல்படுத்தப்பட்டு, நோய் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு, சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் பரிசோதனை நடத்தும் பணிகள் தொய்வில்லாமல் இருப்பதால், இன்னும் இரண்டு நாள்களுக்குள் 25 லட்சம் நபா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்ற எண்ணிக்கையை அடையவுள்ளோம். இதன்படி, சென்னையில், மூன்றில் ஒருவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதே நேரம் இறப்பு விகிதமும் 1.76 சதவீதமாக குறைந்துள்ளது. இதை மேலும் குறைக்கத் தொடா் முயற்சி எடுத்து வருகிறோம். முன்களப் பணியாளா்களுக்கு, கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடா்பாக கணக்கீட்டு பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சென்னையில், பதிவு செய்யப்பட்ட 7,000 மருத்துவமனைகளில் உள்ள சுமாா் 1 லட்சம் மருத்துவப் பணியாளா்களுக்கு, அரசு உத்தரவு கிடைத்தவுடன் தடுப்பூசி வழங்கும் பணிகளை குறுகிய காலத்தில் தொடங்கி விடுவோம்.

பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வரை போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com