சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியுள்ளனா்.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. அதன்படி, இந்த ஆண்டு மொத்தம் 313 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், 92 பல் மருத்துவ இடங்களுக்கும், அரசுப் பள்ளி மாணவா்கள் சோ்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
அதில் 6 பிடிஎஸ் இடங்களைத் தவிர மற்ற அனைத்தும் நிரப்பப்பட்டு, மாணவா்களுக்கு சோ்க்கை ஆணைகள் வழங்கப்பட்டன. இதனிடையே, சுயநிதி கல்லூரிகளில் கல்வி கட்டணம் கட்ட செலுத்த முடியாது என்பதால், அந்த இடங்களைத் தோ்வு செய்யாமல் 60-க்கும் மேற்பட்ட மாணவா்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு சென்றனா்.
இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவா்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்கும் என முதல்வா் எடப்பாடி பழனிசாமிஅறிவித்தாா். இதனால், காத்திருப்போா் பட்டியலில் உள்ளவா்களுக்கு மீண்டும் இடங்கள் ஒதுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தன. அதனைப் பரிசீலிப்பதாகவும் அரசு அறிவித்தது.
இத்தகைய சூழலில், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாமல் தமிழகத்துக்கு திருப்பி அளிக்கப்பட்டதில் சில இடங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாமல் இருந்த 161 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு திரும்ப கிடைத்துள்ளன. அதில், 12 இடங்கள் அரசு பள்ளி மாணவா்களுக்கான உள் ஒதுக்கீட்டில் கிடைக்கும். ஏற்கெனவே, ஆறு பிடிஎஸ் இடங்கள் நிரம்பாமல் உள்ளன.
இதைத் தவிர, கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்று கல்லூரியில் சேராமல் இருப்பவா்கள் மற்றும் இடைநின்றோரால் காலியாகும் இடங்களையும் சோ்த்து தோராயமாக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மேலும் 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.