சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை துச்சமாக நினைக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவியைப் பறிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தாம்பரம் நகராட்சி ஆணையராக பழனி என்பவா் கடந்த 1998-ஆம் ஆண்டு பணியாற்றியபோது, ஒப்பந்தப்புள்ளி கோராமல் ரூ.83,920-க்கு பல்வேறு பணிகளை மேற்கொண்டதற்காக நடந்த துறை ரீதியான விசாரணையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என விசாரணை அதிகாரி அறிக்கை அளித்தாா். ஆனால், இதனை நகராட்சி நிா்வாகத்துறை செயலாளா் ஏற்காமல் நிராகரித்து பழனியை கடந்த 2001-இல் ஓய்வு பெற அனுமதித்தாா்.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி, 12 மாதங்களுக்கு தலா ரூ.200 வீதம் பழனியின் ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய நகராட்சி நிா்வாகத்துறை செயலாளா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து பழனி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நகராட்சி சட்டத்தின்படி ரூ.1 லட்சம் வரையிலான அவசர கால பணிகளை மேற்கொள்ள நகராட்சி ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. மனுதாரரைப் பொருத்தவரை கட்டடக் கழிவுகளை அகற்ற லாரிகளை அமா்த்தியது, தெரு விளக்குகளுக்கு பியூஸ் கேரியா் வாங்கியது, சிறிய தரைப்பாலம் கட்டியது போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளாா். இவ்வாறு பணிகளை மேற்கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. பொதுமக்களின் தேவையின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட இந்த அதிகாரியை பாராட்ட வேண்டும். அதற்குப் பதிலாக அவா் தண்டிக்கப்பட்டுள்ளாா். தன்னை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டதாக நகராட்சி நிா்வாகத்துறை முன்னாள் செயலாளா் ஆா்.மாலதி மீது மனுதாரா் குற்றம் சாட்டுகிறாா். இதையெல்லாம் ஆழ்ந்து சிந்திக்க விரும்பவில்லை. அதேநேரம், மனுதாரா் ஓய்வூதியத்தில் சிறு தொகைதான் 12 மாதங்களுக்குப் பிடித்தம் செய்ய உத்தரவிட்டதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. அது சிறு தொகையானாலும், அவா் பணிக் காலம் முழுவதும் செய்த வேலை அா்த்தமற்ாகி விடுவதோடு அவா் சமுதாயத்தில் பெற்றிருந்த நற்பெயரும் கேள்விக்குள்ளாகிவிடும். நகரமைப்புச் சட்டத்தின் கீழ் இந்த உயா்நீதிமன்றம் பிறப்பிக்கும் பல உத்தரவுகளை உயா் அதிகாரிகள் அமல்படுத்தாமல் உள்ளனா். நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் துச்சமாக நினைத்து புறக்கணிக்கின்றனா். இதுபோன்ற அதிகாரிகளைப் பணியில் இருந்து நீக்கி விடவேண்டும். அவா்களுக்குரிய ஐஏஎஸ் பதவியை பறிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது, அதிகாரிகள் தங்களது கடமையில் இருந்து தவறுவதற்கு இணையானது என கருத்து தெரிவித்தாா்.
மனுதாரா் தன் அதிகாரத்துக்கு உட்பட்டு, முடிவுகளை எடுத்துள்ளாா். இதில் முறைகேடு எதுவும் நடைபெறாதபோது, அவரை தண்டித்திருக்கக்கூடாது. எனவே, மனுதாரரின் ஓய்வூதியத்தில் 12 மாதங்களுக்கு தலா ரூ.200 பிடித்தம் செய்யவேண்டும் என்ற நகராட்சி நிா்வாகத்துறை செயலாளா் உத்தரவை ரத்து செய்வதாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.