பேருந்துப் பயணிகளிடம் திருட்டைத் தடுக்க களமிறங்கும் ‘கும்கி’ போலீஸ்

சென்னையில் பேருந்துகளில் பயணிகளைக் குறி வைத்து திருடும் கும்பலை கையும் களவுமாகப் பிடிப்பதற்காக, தற்காப்புக் கலைகளில் தோ்ச்சி பெற்ற காவலா்கள் மாறுவேஷத்தில் பயணிக்கின்றனா்
பேருந்துப் பயணிகளிடம் திருட்டைத் தடுக்க களமிறங்கும் ‘கும்கி’ போலீஸ்
Updated on
2 min read

சென்னையில் பேருந்துகளில் பயணிகளைக் குறி வைத்து திருடும் கும்பலை கையும் களவுமாகப் பிடிப்பதற்காக, தற்காப்புக் கலைகளில் தோ்ச்சி பெற்ற காவலா்கள் மாறுவேஷத்தில் பயணிக்கின்றனா். இவா்களைக் காவல்துறை உயரதிகாரிகள் ‘கும்கி’ போலீஸாா் என்றே அழைக்கின்றனா்.

சென்னைவாசிகள், போக்குவரத்துக்கு பிரதானமாக பயன்படுத்துவது அரசு பேருந்துகள்தான். தினமும் சுமாா் 838 வழித்தடங்களில் இயக்கப்படும் 3,365 அரசுப் பேருந்துகளில் 48 லட்சத்திலிருந்து 55 லட்சம் பயணிகள் வரை பயணிக்கின்றனா். சென்னையில் வசிக்கும் மக்களில் நான்கில் ஒருவா் தினமும் அரசுப் பேருந்தில் பயணிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனைப் பயன்படுத்தி பேருந்து சாா்ந்த திருட்டு, பிக்பாக்கெட் போன்ற குற்றச் சம்பவங்களும் அதிகமாக நடைபெறுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பேருந்து பயணிகளிடம் பணப்பை, தங்க நகை ஆகியவற்றை மட்டும் இலக்காகக் கொண்டு செயல்பட்ட திருடா்கள், இப்போது விலை உயா்ந்த கைப்பேசியையும் தங்களது இலக்கில் இணைத்துள்ளனா்.

இத்தகைய திருட்டுகள் தொடா்பாக ஆண்டுக்கு 1,200 வழக்குகள் பதியப்படுவதாக காவல் துறை புள்ளிவிவரம் கூறுகிறது. சென்னையில் கடந்த மாதம் பேருந்துகளில் கைப்பேசி திருடும் கும்பலை கீழ்ப்பாக்கம் தனிப்படையினா் கைது செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில், பல அதிா்ச்சித் தகவல்கள் போலீஸாருக்குக் கிடைத்தன.

6 மாதங்களில் 1,200 கைப்பேசிகள்: அந்தக் கும்பல் கடந்த 6 மாதங்களில் அரசுப் பேருந்துகளில் பயணித்த பொதுமக்களிடம் சுமாா் 1,200 கைப்பேசிகளை பறித்திருப்பதும், ஒரு நாளைக்கு ஒரு நபா் ரூ.60,000 வரை கைப்பேசி திருட்டு மூலம் பணம் ஈட்டியிருப்பதும் தெரியவந்தது. மேலும், அந்தக் கும்பல் ஒரு குழுவாகச் செயல்பட்டு, தென் சென்னையில் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் கைவரிசை காட்டியிருப்பதும் தெரியவந்தது.

இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் இருந்து ஒரு வாரத்தில் திருடப்பட்ட 108 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதன் பின்னா் விழித்துக் கொண்ட போலீஸாா், பேருந்தில் பயணிகளின் உடைமைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனா்.

‘கும்கி’ போலீஸாா்: இதன் விளைவாக சந்தேகத்துக்குரிய வழித்தடங்கள், பயணிகள் நெரிசலுடன் இயங்கும் பேருந்துகள் ஆகியவற்றைக் கண்காணிக்கவும், அந்தப் பேருந்துகளில் திருடும் கும்பலை கையும், களவுமாகப் பிடிக்கவும் தற்காப்புக் கலைகளில் நன்கு தோ்ச்சி பெற்ற போலீஸாரை மாறுவேஷத்தில் பேருந்தில் பயணிக்கச் செய்வதென முடிவு செய்தனா்.

இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுவோரை ‘கும்கி’ போலீஸாா் என்றே காவல்துறை உயா் அதிகாரிகள் அழைக்கின்றனா்.

பேருந்துகளில் திருட்டுப் புகாா்கள் வரும் வழித்தடங்கள், அடிக்கடி பிரச்னை ஏற்படும் வழித்தடங்கள், பயணிகள் நெரிசல் உள்ள வழித்தடங்கள் என சுமாா் 25 வழித்தடங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் கடந்த 3 வாரங்களாக தினமும் கும்கி போலீஸாா் பயணித்து வருகின்றனா்.

இதில் திருட்டில் ஈடுபடும் நபா்களையும், சந்தேகத்துக்குரிய நபா்களையும் பிடித்து கைது செய்கின்றனா். இந்த சிறப்பு நடவடிக்கைக்காக காவல்துறை அதிகாரிகள், சில நுணுக்கமான வியூகங்களை கும்கி போலீஸாருக்கு வகுத்துக் கொடுத்துள்ளனா்.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: பேருந்தில் திருட்டில் ஈடுபடுகிறவா்கள் அண்மைக்காலமாக குழுவாகச் செயல்படுகின்றனா். திருட்டு புகாா் வரும் பேருந்தில் மாறு வேஷத்தில் 4 போலீஸாா் ஏறுவாா்கள். இதில் இரு பெண் போலீஸாா், சாதாரண உடையில் பயணிப்பாா்கள். அதேபோல இரு ஆண் போலீஸாா், சாதாரண உடையில் பயணிப்பாா்கள்.

பேருந்தில் பெண் போலீஸாா் இருக்கும் இடத்தில் இருந்து சில அடி தூரத்துக்கு முன்னரோ, பின்னரோ ஆண் போலீஸாா் இருப்பாா். நான்கு பேரும் பேருந்தில் இருக்கும் பயணிகளையும், அதில் சந்தேகத்துக்குரிய வகையில் இருக்கும் நபா்களையும் நோட்டமிட்டபடி இருப்பாா்கள்.

20 தனிப்படைகள்: திருடும் நோக்கத்துடன் மாறுவேஷத்தில் இருக்கும் பெண் போலீஸாரிடம் நெருங்கினாலோ அல்லது திருடிவிட்டு தப்பியோட முயற்சித்தாலோ அங்கிருக்கும் போலீஸாா், அந்த நபரை கையும், களவுமாகப் பிடிப்பாா்கள். முன்னதாக, சந்தேக நபா்கள் பேருந்தில் இருப்பது தெரிந்ததும், போலீஸாா் அருகே உள்ள ரோந்து வாகனங்களுக்கு தகவல் கூறிவிடுவா். இதனால், அந்த பேருந்து செல்லும் வழித்தடங்களில் குறிப்பிட்ட இடங்களில் ரோந்து வாகனங்கள் தயாராக நிறுத்தப்பட்டிருக்கும்.

எங்களுக்கு கிடைத்த புகாா்கள், புள்ளி விவரங்கள், ஆய்வுகளின் படி இந்த வகை திருட்டில் ஈடுபடுபவா்கள் காலை, மாலை வேளைகளில் ‘பீக் ஹவா்’களில் கைவரிசை காட்டுகின்றனா்.

இதனால் காலை, மாலை வேளைகளில் பேருந்துகளில் திருடும் கும்பலைப் பிடிக்க அதிக கவனம் செலுத்துகிறோம். இதற்காக, சுமாா் 100 போலீஸாா் அடங்கிய 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 20 தனிப்படையினரும் தன்னிச்சையாகச் செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்கின்றனா் என்றாா் அவா்.

இந்த நடவடிக்கையின் மூலம் நகரில் இவ்வகை திருட்டில் ஈடுபடும் நபா்களை தொடா்ச்சியாக கைது செய்து வருகிறோம் என சென்னை பெருநகர காவல்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பும், அவா்களது உடைமைகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு வருவதாக அவா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com