சென்னையில் கைவிடப்படும் 6 மெட்ரோ ரயில் நிலையங்கள்

சென்னையில் அமைக்கப்பட்டுவரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணியில், 750 மீட்டருக்கும் குறைவான தொலைவில் திட்டமிடப்பட்ட 6 ரயில் நிலையங்களை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கைவிடப்படும் 6 மெட்ரோ ரயில் நிலையங்கள்

சென்னை: சென்னையில் அமைக்கப்பட்டுவரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணியில், 750 மீட்டருக்கும் குறைவான தொலைவில் திட்டமிடப்பட்ட 6 ரயில் நிலையங்களை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணியில் புரசைவாக்கம் அருகே டௌடன் ஜங்ஷன் உள்பட 6 ரயில் நிலையங்களை கைவிடுவதன் மூலம், திட்டப் பணிக்கான செலவில் ரூ.1,200 கோடி வரை குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணியில் திட்டமிடப்பட்டிருந்த டௌடன் ஜங்ஷன், பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி மற்றும் தபால் பெட்டி ஆகிய ரயில் நிலையங்கள் நிலத்துக்கடியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இவைகளுடன், செயின்ட் ஜோசஃப் கல்லூரி ரயில் நிலையம் என 6 ரயில் நிலையங்கள் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 118 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணியில் 128 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இவற்றில் 48 ரயில் நிலையங்கள் நிலத்துக்கடியில் அமைக்கப்படும். இவற்றுக்கு ஆகும் செலவி ரூ.61,843 கோடி. இவை அனைத்தும் வரும் 2026ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கவும் கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வழக்கமாக மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்தும் ஒரு கிலா மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டு வருகிறது. மக்கள் எளிதாக பயன்படுத்தவும், அவசர காலத்தில் எளிதாக வெளியேறவும் இந்த வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது.

6 ரயில் நிலையங்கள் கைவிடக் காரணம்?

சென்னை மெட்ரோ ரயில் லிமிடட் நிறுவனம் சார்பில் இது பற்றி கூறுகையில், முதல் காரணம், குறைந்த தொலைவில் அடுத்தடுத்த ரயில் நிலையங்கள் அமைவதைத் தடுக்கவே என்கிறார்கள். மாதவரத்தில் தபால் பெட்டி என்ற இடத்தில் அமையவிருந்த ரயில் நிலையம் கைவிடப்பட மிக குறுகிய வளைவு அப்பகுதியில் இருப்பதுதான். எனவே ரயில் நிலையத்தை பராமரிப்பது மிகவும் சவாலான பணியாக இருக்கும் என்பதால். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் வெறும் தபால் பெட்டி மற்றும் மீனாட்சி கல்லூரி ரயில் நிலையங்களை கைவிடுவதன் மூலம் செலவினத் தொகையில் ரூ.450 கோடி வரை மிச்சமாகும் என்கிறார்கள் தகவலறிந்தவட்டாரங்கள்.

45.8 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மாதவரம் பால்பண்ணை - சிறுசேரி சிப்காட் என்ற மூன்றாம் பிரிவுக்குள் தபால் பெட்டி, டௌடன், செயின் ஜோசஃப் கல்லூரி ரயில் நிலையங்கள் வரவிருந்தன. கலங்கரை விளக்கம் - பூவிருந்தமல்லி பைபாஸ் என்ற நான்காம் பிரிவில் பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி ரயில் நிலையங்கள் அமையவிருந்தன.

மாதவரம் பால் பண்ணை மற்றும் முராரி மருத்துவமனை ரயில் நிலையங்களிலிருந்து தபால் பெட்டி ரயில் நிலையம் முறையே 980 மீட்டர் மற்றும் 684 மீட்டர் இடைவெளியில் அமையவிருந்தது. இதுபோல மீனாட்சி கல்லூரியும் கோடம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து வெறும் 725 மீட்டரிலும் அமையவிருந்தன. 

இப்படியே ஆறு ரயில் நிலையங்களுமே ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கும் குறைவான இடைவெளியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்ததால் இவற்றை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, தபால் பெட்டி ரயில் நிலையம் கைவிடப்படுவதை எதிர்த்து அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருப்பதாகவும் கூறுகிறார்கள். இங்கு குறைவானவர்களே இருக்கிறார்கள் என்பதால்தான் ரயில் நிலையத்தை கைவிட்டிருப்பார்கள் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்களாம்.

முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணியின்போது சென்னை சென்டிரல் மற்றும் ஓமந்தூரார் ரயில் நிலையங்களுக்கு இடையே 1.5 கிலோ மீட்டர் தொலைவு இருக்கிறது. இதனால், சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தின பூங்கா அருகே, இரண்டு ரயில் நிலையங்களுக்கும் இடையே ஒரு அவசரகால வெளியேற்றும் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோலவே, இரண்டாம் கட்டப் பணியிலும், ரயில் நிலையங்கள் கைவிடப்பட்ட பகுதிகளுக்கு இடையே அவசரகால வெளியேறும் பகுதி அமைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

முதலில் ரூ.89,000 கோடிக்கு திட்டமிடப்பட்டு, பிறகு சின்ன சின்ன மாற்றங்களை அதாவது நிலத்துக்கடியில் அமைக்கப்படும் ரயில் நிலையங்களை தரைக்கு மேலே அமைப்பது, சில ரயில் நிலையங்களின் அளவைக் குறைப்பது போன்றவற்றால் 61,843 கோடி ரூபாயாக குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com