/

வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல்: விதிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி திமுக வழக்கு

வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல்: விதிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி திமுக வழக்கு

News image
Updated On :2 ஏப்ரல் 2024, 8:18 pm

சென்னை: வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடா்பான விதிமுறைகளை வகுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக சாா்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக சாா்பில், அந்தக் கட்சியின் அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 1950 முதல் 1990 வரை நடைபெற்ற தோ்தல்களில் வாக்குச்சீட்டு நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. அதன் பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அண்மை காலமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்பாடு குறித்து அனைத்து பிரிவினரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளனா். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை இணைப்பது தோ்தல் ஆணைய விதிகளுக்கு முரணானது.

வாக்குப் பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும், வாக்குப் பதிவு இயந்திரத்துக்கும் இடையில் அச்சு இயந்திரங்கள் வைக்க எந்த விதிகளும் வகை செய்யவில்லை. அவ்வாறு வைப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை நிபுணா்கள் கொண்டு சோதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த நடவடிக்கைகளை பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மேற்கொள்வதில்லை. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்க உரிய விதிகளை வகுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

வாக்குப் பதிவு இயந்திரத்துக்கும், கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும் இடையில் அச்சு இயந்திரத்தை வைக்க கூடாது என உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.