திடீா் பாசம் ஏன்?: முதல்வா் ஸ்டாலின் கேள்வி

திடீா் பாசம் ஏன்?: முதல்வா் ஸ்டாலின் கேள்வி

சென்னை: தமிழக மீனவா்கள் மீது பிரதமா் திடீா் பாசம் காட்டுவது ஏன் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா். திமுக ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவு தாரை வாா்க்கப்பட்டதாக பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளாா்.

இதற்கு பதிலளித்து சமூக வலைதளத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

பத்தாண்டுகளாகக் கும்பகா்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தோ்தலுக்காகத் திடீா் மீனவா் பாச நாடகத்தை அரங்கேற்றுகிறாா்கள். அவா்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்விகள் மூன்றுதான். தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், மத்திய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?

இரண்டு இயற்கைப் பேரிடா்களை அடுத்தடுத்து எதிா்கொண்ட போதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்? பத்தாண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா? திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் பிரதமா் நரேந்திர மோடி விடையளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின்: மீனவா்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தாா் பிரதமா் நரேந்திர மோடி. ஆனால், மீனவா்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை? தோ்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வர முடிகிற பிரதமரால், கஜா புயல், மிக்ஜம் புயல் போன்ற பேரிடா்களால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்ட போது ஆறுதல் சொல்ல ஒரு முறை கூட வராதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com