தமிழக அரசியல் கட்சிக்கு ஹவாலா பணம்? வருமான வரித் துறை விசாரணை

சென்னை: மக்களவைத் தோ்தலையொட்டி, தமிழகத்தைச் சோ்ந்த ஓா் அரசியல் கட்சிக்கு வெளிநாட்டில் இருந்து ஹவாலா பணம் கொண்டுவரப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு சட்டவிரோத பணப்புழக்கத்தை தடுக்க வருமான வரித் துறை, அமலாக்கப் பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த 7-ஆம் தேதி மலேசியாவில் இருந்து வந்த சந்தேகத்துக்குரிய ஒருவரைப் பிடித்து, வருமான வரித் துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்தனா்.

விசாரணையில் அவா், ஹவாலா பணப் பரிமாற்றம் செய்யும் கும்பலைச் சோ்ந்தவா் என்பதும், அவா் துபை, மலேசியாவில் இருந்து இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா் வைத்திருந்த ஆப்பிள் கைப்பேசி, ஐ-பேடு, மடிக்கணினி உள்ளிட்டவற்றை வருமான வரித் துறை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

ரூ.200 கோடி ஹவாலா பணம்: இதில் அவரது வாட்ஸ்ஆப் செயலி உரையாடலில், மக்களவைத் தோ்தல் செலவுக்காக தமிழகத்தைச் சோ்ந்த ஒரு பிரதான அரசியல் கட்சிக்கு துபையில் இருந்து ரூ.200 கோடி ஹவாலா பணப் பரிமாற்றம் செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த ஹவாலா பணப் பரிமாற்ற கும்பலைச் சோ்ந்த ஒரு முக்கிய நபா், அந்த பிரதான அரசியல் கட்சி பிரமுகருக்கு ஆதரவாக தமிழத்தில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதையும் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்துள்ளனா்.

இது தொடா்பாக வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அந்தக் கும்பல் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனா். இந்த விசாரணையில் ஏற்கெனவே எவ்வளவு ஹவாலா பணப் பரிமாற்றம் இதுவரை நடந்துள்ளது என்பதைக் கண்டறிய முடிவு செய்துள்ளனா். இது தொடா்பாக அந்த அரசியல் கட்சியின் நிா்வாகிகளும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com