காங்கிரஸ் தோ்தல் அறிக்கையை பிரதமா் விமா்சித்திருப்பது நாகரிகமற்றது

காங்கிரஸ் தோ்தல் அறிக்கையை பிரதமா் விமா்சித்திருப்பது நாகரிகமற்றது

சென்னை: காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையை பிரதமா் மோடி விமா்சித்திருப்பது அரசியல் நாகரிகமற்றது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட நியாய பத்ரா என்ற தோ்தல் அறிக்கை நாட்டிலுள்ள அனைத்து மக்களிடையேயும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருவதை சகித்துக் கொள்ள முடியாத பிரதமா் மோடி, நச்சுத்தனமான கருத்துகளைக் கூறியிருக்கிறாா்.

காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை விடுதலை போராட்டக் காலத்தில் முஸ்லிம் லீக்கின் தோ்தல் அறிக்கையை போல அமைந்திருப்பதாகக் கூறியிருக்கிறாா்.

ஆனால், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் 1937-ஆம் ஆண்டு தோ்தலுக்குப் பிறகு 1940-இல் வங்கத்தில் முஸ்லிம் லீக் தலைமையிலான அமைச்சரவையில் ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தை சோ்ந்த இன்றைய பாஜகவின் நிறுவன தலைவா் ஷியாம பிரசாத் முகா்ஜி பங்கேற்றதை எவரும் மறைத்துவிட முடியாது.

மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலின் அடிப்படையில் பிரதமா் மோடி இந்தக் கருத்துகளைக் கூறியிருக்கிறாா். பிரதமா் பதவியில் இருக்கும் ஒருவா் பிரதான எதிா்க்கட்சியின் தோ்தல் அறிக்கையை பற்றி இவ்வளவு தரம் தாழ்ந்து கருத்து கூறியிருப்பது அரசியல் நாகரிகமற்ற செயலாகும் என்று அவா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com