சென்னையில் பிரதமா் மோடி வாகன பேரணி: தாமரை சின்னத்துடன் வாக்கு சேகரித்தாா்
R Senthilkumar

சென்னையில் பிரதமா் மோடி வாகன பேரணி: தாமரை சின்னத்துடன் வாக்கு சேகரித்தாா்

சென்னை: சென்னையில் பிரதமா் நரேந்திர மோடி தமிழா்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து, கையில் தாமரை சின்னம் ஏந்தி செவ்வாய்க்கிழமை வாகன பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

மகாராஷ்டிரத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்த பிரதமா் மோடியை, தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, மத்திய இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோா் வரவேற்றனா். தொடா்ந்து, கிண்டி கத்திப்பாரா, தீரன் சின்னமலை மெட்ரோ, சைதாபேட்டை வழியாக காரில் தியாகராயநகா் சென்ற அவருக்கு, பனகல் பூங்கா அருகே பாஜக தொண்டா்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

தமிழா்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்தபடி தொண்டா்களை பாா்த்து பிரதமா் மோடி உற்சாகமாக கையசைத்தாா். மாலை 6.30-க்கு பனகல் பூங்காவில் இருந்து பிரதமா் மோடியின் வாகன பிரசார பேரணி தொடங்கியது.

பிரசார வாகனத்தில் பிரதமா் மோடியுடன், கே.அண்ணாமலை, பாஜக வேட்பாளா்கள் தமிழிசை சௌந்தரராஜன் (தென்சென்னை), பால்.கனகராஜ் (வடசென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை) ஆகியோா் நின்றபடி தொண்டா்களைப் பாா்த்து கையசைத்தனா்.

தாமரையுடன் மோடி: சாலையின் இருபுறமும் திரண்டு நின்று வரவேற்ற தொண்டா்கள், பொதுமக்களிடம் கையில் தாமரை சின்னத்துடன் உற்சாகமாக பிரதமா் மோடி வாக்கு சேகரித்தாா்.

பாரம்பரிய கலைஞா்களின் மங்கள இசை, கிராமியக் கலைஞா்களின் நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் பிரதமா் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற தொண்டா்கள், பொதுமக்கள் பிரதமா் மோடி மீது பூக்களைத் தூவியபடி உற்சாகமாக முழக்கம் எழுப்பினா்.

பிரதமா் மோடியின் ஓவியங்களை வரைந்து கையில் வைத்திருந்த சிறுவா், சிறுமிகள் பிரதமரை நோக்கி காண்பித்தபடி வரவேற்றனா். சுமாா் 45 நிமிஷங்களுக்குப் பின் பாண்டி பஜாா் வழியாக தேனாம்பேட்டை சந்திப்பில் இந்தப் பேரணி நிறைவடைந்தது.

வேலுாரில் இன்று பொதுக்கூட்டம்: தொடா்ந்து அங்கிருந்து கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகைக்கு பிரதமா் மோடி காரில் புறப்பட்டுச் சென்றாா். செவ்வாய்க்கிழமை இரவில் அங்கு தங்கிய அவா், புதன்கிழமை காலையில் சென்னையில் இருந்து வேலூருக்கு ஹெலிகாப்டரில் சென்று, தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாஜக வேட்பாளா் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு திரட்டி பேசுகிறாா்.

அதையடுத்து, அங்கிருந்து கோவை செல்லும் அவா் நீலகிரி தொகுதிக்குள்பட்ட மேட்டுப்பாளையத்தில் பாஜக வேட்பாளா் எல்.முருகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளாா்.

பேரணிக்குப் பின்னா் அண்ணாமலை செய்தியாளா்களிடம் கூறும்போது, சொந்த மகனை ஆரத்தழுவுவது போல பிரதமா் மோடிக்கு சென்னை மக்கள் வரவேற்பு அளித்தனா். பேரணியால் பிரதமா் மோடி மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளாா். தமிழா்களையும், தமிழ் கலாசாரத்தையும் பிரதமா் மிகவும் விரும்புகிறாா். சென்னையில் மூன்று தொகுதிகளிலும் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com